சென்னையில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் குளியலறையில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னை கிண்டியில் தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை அவர் குளியலறைக்குச் சென்றபோது, ஜன்னல் வழியாக ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே வெளியே ஓடிவந்த அந்தப் பெண், அந்த நபரின் செல்போனைப் பறித்தபோது அவர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். பெண்ணின் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவரவே, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த இரண்டு செல்போன்களையும் கைப்பற்றிய இளம்பெண் கிண்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், முல்லைநாதன் (31) என்பவர் இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண்கள் தங்கியிருந்த வீட்டின் அருகிலேயே தனது நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்த அவர், பெண்கள் குளியலறைக்குச் செல்லும்போது ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். தற்போது முல்லைநாதனை கைது செய்துள்ள போலீசார், அவரிடமிருந்து செல்போன்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
