கடந்த டிசம்பர் 8-ம் தேதி இரவு, ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயில், உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க தயாராக இருந்தது. ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், பயணிகள் நடந்து செல்லும் தரைத்தள பாதையில், நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற இளைஞர் தனது டூவீலருடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ரயிலைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர், ரயிலில் அடிபடாமல் இருக்க உடனடியாக வண்டியை விட்டு குதித்து ஓடிவிட்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் ரயில் இன்ஜின் தண்டவாளத்தில் நின்றிருந்த டூவீலர் மீது மோதி, அதை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதனால் ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் ஒரு பெரிய விபத்தும் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான டூவீலரின் எண் தகடு நொறுங்கியதால், அதன் எஞ்சின் எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரித்தனர்.
அப்போது டூவீலரை ஓட்டி வந்தது கலைச்செல்வன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்தபோது, மதுக்கடை அடைக்க இருந்ததால், அவசரத்தில் மது வாங்க தண்டவாளத்தைக் குறுக்கே கடக்க முயன்றதாக அவர் கூறினார். இந்த ஆபத்தான செயலுக்காகக் கைது செய்யப்பட்ட கலைச்செல்வன், பின்னர் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
