திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி ஜூடி ஜெகதாம்பாள். இவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

மேலும், கடந்த 2024-ஆம் ஆண்டு இருதய நோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், குழந்தை இல்லாத மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த மன உளைச்சலின் காரணமாக ஜூடி ஜெகதாம்பாள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

வழக்கம் போல வேலைக்குச் சென்றிருந்த கணவர் பெருமாள், பிற்பகலில் மனைவிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது, மனைவி தண்ணீர் தொட்டிக்குள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பென்னாலூர் பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி 13 ஆண்டுகாலமாகக் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.