தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (52) மற்றும் அவரது மகன் பிரதீப் (27) ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய பொறுப்பில் செயல்பட்டு வந்தனர். பிரதீப்புக்கு சின்னமனூரைச் சேர்ந்த நிகிலா (32) என்பவருடன் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் முத்தையன்செட்டிபட்டியில் தங்கியிருந்தனர்.
பிரதீப், அமமுக கட்சியின் கிளை செயலாளராக இருந்து எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்மீது பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுத்து, நிகிலா தாய் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். உறவினர்கள் சமரச முயற்சி செய்ததால் கடந்த வாரம் நிகிலா மீண்டும் கணவருடன் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் தகராறு ஏற்பட்டுவிட்டது. ஆத்திரமடைந்த பிரதீப், நிகிலாவை தாக்கியதாக கூறப்படுகிறது. காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிகிலா, பிரதீப் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சமரசம் தோல்வியடைந்த நிலையில், பிரதீப்புடன் வாழ முடியாது என முடிவு செய்து, தனது உடமைகளை எடுத்துச் செல்ல நிகிலா தனது அண்ணன் விவேக் (33) மற்றும் 10-க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் கணவர் வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான தகராறு வெடித்து கைகலப்பாக மாறியது. கோபத்தின் உச்சத்தில் பிரதீப், தனது மனைவியின் அண்ணன் விவேக்கை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதை பார்த்த நிகிலா மயங்கிய நிலையில் இருந்தபோது, மாமனார் சிவக்குமார் அவரை அரிவாளால் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இரட்டை கொலை செய்த பிரதீப் மற்றும் சிவக்குமார் சம்பவத்துக்குப் பிறகு தப்பிச் சென்றனர். தகவல் தரப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விசயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு இரட்டை படுகொலையாக மாறிய இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
