சேலத்தில் மகுடஞ்சாவடியில் 23 வயது இளைஞர் ஆகாஷ், தனது தந்தை பழனிசாமி (47) மற்றும் அவரது லிவிங் பார்ட்னர் ஜெயலட்சுமி (38) ஆகியோரை கொலை செய்து, உடல்களை துண்டு துண்டாக வெட்டி, இரண்டு வெவ்வேறு ஏரிகளில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, ஜெயலட்சுமியின் மகள், ஆகாஷிடம், பழனிசாமி தன்னை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகவும், இதை தனது தாய் ஜெயலட்சுமி அறிந்திருந்தும் தடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், இருவரையும் கொலை செய்ய முடிவு செய்ததாக காவல்துறை தெரிவித்தது.

பழனிசாமியின் மனைவி ஜெயந்தி, கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில், பழனிசாமி ஜெயலட்சுமி மற்றும் அவரது மகளுடன் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தார். ஆகாஷ், கசாப்பு கடையில் பணிபுரிபவர். கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, வீட்டிற்குள் பழனிசாமி மற்றும் ஜெயலட்சுமியை கசாப்பு கத்தியால் தாக்கி கொலை செய்த ஆகாஷ், உடல்களை துண்டு துண்டாக வெட்டி, இரண்டு பைகளில் அடைத்து, ஒரு பையை தலையூர் ஏரியிலும், மற்றொரு பையை எகாபுரம் ஏரியிலும் வீசினார்.

கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது, ஆகாஷ் மழுப்பலான பதில்கள் அளித்தார். பின்னர், தனது மாமாவிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. மகுடஞ்சாவடி காவல்துறையினர், ஆகாஷை கைது செய்து, உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர.

ஆகாஷ் மற்றும் ஜெயலட்சுமியின் மகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.