தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் பாமக-வின் திலகபாமா. தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அன்று வெள்ளைக்காரன் மக்களுக்கு எதிராக இருந்தான்; இன்று திமுக மக்களுக்கு விரோதமாக உள்ளது” என்று காட்டமாக தாக்கினார்.
தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மூலம் மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்க முடியாத அவலநிலை, போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க முடியாத தோல்வி ஆகியவற்றை சுட்டிக்காட்டி, திமுக அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும், தமிழக காவல்துறையின் தற்போதைய நிர்வாகத்தையும் திலகபாமா கடுமையாக விளாசினார். புதிய டிஜிபி நியமனம் சட்டத்தை மீறி, நீதிமன்ற உத்தரவுகளை புறந்தள்ளி செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று அவர் குற்றம்சாட்டினார்.
“சட்டம் ஒழுங்கு மிக முக்கியமான இந்த நேரத்தில், முதலமைச்சர் உடனடியாக இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்திய திலகபாமா, இந்த நியமனம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
