மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தின் நான்காம் கட்டத்தில், திருப்பரங்குன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), திமுக அரசை கடுமையாக சாடினார். மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரி உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய ஊழல் நடந்திருக்க முடியாது எனவும், அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் ஊழல் பரவியுள்ளதாகவும், காஞ்சிபுரம், நெல்லை, கோவை போன்ற இடங்களில் கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடு ஈர்த்ததாகக் கூறினாலும், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பினார் இபிஎஸ்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், சிறுமியர் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் இபிஎஸ் வேதனை தெரிவித்தார். புதிய டிஜிபி நியமனத்தில் சட்டவிதிகளை மீறி, தகுதியற்றவரை நியமித்ததாக திமுக அரசை விமர்சித்த அவர், இதனால் 8 மூத்த டிஜிபிக்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றார்.
போதைப்பொருள் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், இளைஞர்கள் சீரழிவதாகவும் குற்றம்சாட்டிய இபிஎஸ், ஸ்டாலின் இப்போது போதைக்கு எதிராக பேசுவது வெறும் நாடகம் என்றார். டாஸ்மாக் மூலம் நாளொன்றுக்கு 15 கோடி, ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாகவும், மின்கட்டணம், குடிநீர் வரி, குப்பை வரி உயர்த்தப்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர் மாநாடு மூலம் லட்சக்கணக்கான முதலீடுகளை ஈர்த்ததாகவும், திமுக இதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
