தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர், ஈரானில் கப்பல் வேலைக்குச் சென்ற தனது மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவரது மகன் கடந்த ஆண்டு மே மாதம் ஈரானில் உள்ள ஒரு சரக்குக் கப்பலில் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரானில் போர்ச் சூழல் உருவானதைத் தொடர்ந்து அங்குள்ள தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கடந்த சில நாட்களாகத் தனது மகனிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் அந்த மனுவில் ஞானம் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாலுமிகள் அங்குள்ள துறைமுகங்களிலும் கப்பல்களிலும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது மகனின் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ள ஞானம், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டுத் தனது மகனைப் பத்திரமாகத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த மனுவைப் பரிசீலித்து உரியத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், காணாமல் போன இளைஞரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
