உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சுல்தான்புரா பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தால் அமித் என்ற வாலிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 19, 2026 அன்று அமித்துக்கும் குஷி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.

ஆனால், திருமணமான சில நாட்களிலேயே அமித்தின் தம்பியான போலுவுக்கும், அண்ணி குஷிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14 அன்று, இருவரும் வீட்டில் தனிமையில் இருந்ததை அமித் நேரில் பார்த்துவிட்டு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குஷி, தங்களுக்கு இடையூறாக இருக்கும் கணவனை வழிக்கு கொண்டு வருமாறு கொழுந்தன் போலுவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஜூன் 17 அன்று அமித்தை ஒரு வயல்வெளிக்கு அழைத்துச் சென்ற போலு, அவர் மீது கல்லை தூக்கிப் போட்டு தாக்கியதுடன், கம்ச்சாவால் (துண்டால்) கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

அமித்தின் உடல் மீட்கப்பட்டு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவரது கழுத்து எலும்பு மற்றும் மண்டை ஓட்டு எலும்புகள் உடைந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஆக்ரா போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தம்பி போலுவும், அண்ணி குஷியும் சேர்ந்து இந்த கொலையைச் செய்தது அம்பலமானது. தற்போது இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.