கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 2027 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா உள்ளிட்ட ஆப்ரிக்க  நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 18 மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், அதற்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. ஐ.சி.சி-யின் இந்த திடீர் முடிவுக்கு ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் வெளிப்படையாகக் கொதித்துள்ளனர்.

வரவிருக்கும் உலகக் கோப்பை தொடரில் ஐ.சி.சி திடீரென ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. அதன்படி, புதிதாக ‘சூப்பர் சீரிஸ் ஸ்டேஜ்’  என்ற சுற்றைக் கொண்டு வந்துள்ளனர். இந்த புதிய விதியின்படி, உலகக் கோப்பைக்குத் தகுதி பெறத் போராடும் 12, 13 மற்றும் 14-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் தங்களுக்குள் ஒரு முத்தரப்புத் தொடரில் மோத வேண்டும். இதில் போராடி வெற்றி பெறும் ஒரே ஒரு அணி மட்டுமே மெயின் உலகக் கோப்பை தொடருக்குள் நுழைய முடியும். அங்கு 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதும். ஐ.சி.சி-யின் இந்த திடீர் கட்டுப்பாடுகளால், வளர்ந்து வரும் சிறிய மற்றும் அசோசியேட் கிரிக்கெட் நாடுகளுக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்புகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுவிட்டதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

இந்த திடீர் விதிமுறை மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து ஒரு காரசாரமான கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், “தகுதிச் சுற்றுக்கான போட்டித் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, நடுவழியில் விதிகளை மாற்றுவது என்பது பல நாடுகளின் பல வருடக் கடின உழைப்பைத் தண்ணீரில் வீசுவதற்குச் சமம். இந்தத் திடீர் முடிவு வளர்ந்து வரும் அசோசியேட் கிரிக்கெட்டைப் பின்னோக்கித் தள்ளும் செயலாகும். உலகக் கோப்பைக்கு இன்னும் 18 மாதங்களுக்குக் குறைவான காலமே உள்ள நிலையில், இந்த அதிரடி மாற்றம் அணிகளைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆக்கியுள்ளது” என்று மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விதி மாற்றத்திற்கு எதிராகப் போராடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பே நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளின் கேப்டன்கள், உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வாயிலாகத் தங்களது கடும் எதிர்ப்பைத் பதிவு செய்திருந்தனர். இதனிடையே, உலகக் கோப்பை லீக்-2 போட்டிகளின் அடிப்படையில் அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஓமான் ஆகிய அணிகள் ஏற்கனவே ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்குத் தங்களின் இடங்களை புக் செய்துவிட்டன. மறுபுறம் நமீபியா, கனடா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்  ஆகிய அணிகள் தகுதிச் சுற்று பிளே-ஆஃப் போட்டிகளில் விளையாடவுள்ளன.

இப்படி அணிகள் கடுமையான வியூகங்களுடன் தகுதி பெறப் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐ.சி.சி கடைசி நேரத்தில் கொண்டுவந்த இந்த விதிகளின் மாற்றம் சிறிய கிரிக்கெட் நாடுகளைத் தலைசுற்ற வைத்திருக்கிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி-யிடம் முறையான விளக்கமும் வெளிப்படைத்தன்மை கோரி இரண்டு முறை கூட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், இரண்டாவது கூட்டம் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஐ.சி.சி தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை என்பது அசோசியேட் நாடுகளை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.