நமது அன்றாட உணவிலும் உணவகங்களிலும் பன்னீருக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. ஆனால், நாம் ருசித்துச் சாப்பிடும் பன்னீர் உண்மையான பாலில் இருந்து தயாரிக்கப்பட்டதுதானா என்றால், பல இடங்களில் இல்லை என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மை. சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் ‘அனலாக் பன்னீர்’ எனப்படும் போலியான செயற்கைப் பன்னீர் விற்பனைக்கு 1 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டு, உணவகங்கள் மற்றும் கிளவுட் கிச்சன்களில் இதைப் பயன்படுத்தக் கூடாது என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, பசு அல்லது எருமைப் பாலைத் திரைய வைத்து இயற்கையான முறையில் தயார் செய்யப்படுவதே அசல் பன்னீர் ஆகும். ஆனால், அனலாக் பன்னீர் என்பது பாலுக்குப் பதிலாகச் சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் , ஸ்டார்ச் (மாவுப்பொருள்), ஸ்கிம்டு மில்க் பவுடர் மற்றும் கெட்டித் தன்மையைத் தரும் ரசாயன எமல்சிஃபையர்களைக் கலந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஒரு ‘நான்-டேரி’ தயாரிப்பாகும்.
உணவகங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக அசல் பன்னீரின் விலையை விட மிகக் குறைந்த செலவில் கிடைக்கும் இந்த போலி பனீரைப் பரவலாகப் பயன்படுத்தி வந்துள்ளன.
மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடத்திய தொடர் சோதனைகளில், சந்தையில் விற்கப்பட்ட அனலாக் பன்னீர் மாதிரிகளில் 35%-க்கும் அதிகமானவை உடலுக்குப் பாதுகாப்பற்றவையாகக் கண்டறியப்பட்டன.
அதுமட்டுமின்றி, உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இந்தச் செயற்கைப் பன்னீரை அசல் பன்னீர் என்ற பெயரிலேயே வழங்கி ஏமாற்றி வந்துள்ளன. மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடும் இந்த முறைகேட்டைக் கட்டுப்படுத்தவும், கலப்படத்தைத் தடுக்கவுமே மாநில அரசு இந்தத் தடையை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
இந்த அனலாக் பன்னீர் பயன்பாடு குறித்து மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் கடும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இதில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்கள் இரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயத்தை உயர்த்துகின்றன. மேலும், இதில் அசல் பன்னீரில் உள்ளது போல புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் இல்லாததால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதுடன், இதில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் குடல் அழற்சி, செரிமானக் கோளாறுகள் மற்றும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
