ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது ஒரு குற்றம் நடந்த இடத்தின் காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயமின்றி, பாதிக்கப்பட்டவர் எந்தவொரு காவல் நிலையத்திலும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சென்று பதிவு செய்யக்கூடிய முதல் தகவல் அறிக்கையாகும். 2012 நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையின் பேரில், 2013-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிப்பதையும் ஆதாரங்கள் அழிவதையும் தடுக்கவே இந்த அவசரக் கால நடைமுறை கொண்டு வரப்பட்டது.
வழக்கமான எஃப்.ஐ.ஆரில் காவல் நிலையத்தின் வரிசை எண் குறிப்பிடப்படும்; ஆனால், ஜீரோ எஃப்.ஐ.ஆரில் சீரியல் எண்ணிற்குப் பதிலாக ‘0’ என்று மட்டுமே பதிவிடப்படும். வழக்கமான எஃப்.ஐ.ஆர் அந்த குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட காவல் அதிகாரிகளால் மட்டுமே விசாரிக்கப்படும். ஆனால் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டவுடன், எந்தக் காவல் நிலைய அதிகாரியும் முதற்கட்ட விசாரணையை உடனடியாகத் தொடங்க முடியும். பின்னர் 24 மணி நேரம் அல்லது அதிகபட்சமாக 3 நாட்களுக்குள் இந்த எஃப்.ஐ.ஆர் சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு முறைப்படி மாற்றி அனுப்பப்படும்.
பாதிக்கப்பட்ட நபர் மட்டுமன்றி, அவரது பெற்றோர், உறவினர்கள் அல்லது குற்றச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் என யார் வேண்டுமானாலும் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியும். கொலை, பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், குடும்ப வன்முறை மற்றும் மோசமான சாலை விபத்துகள் போன்ற பிணையில் வர முடியாத கடுமையான குற்றங்களுக்கு உடனடியாகப் பாதுகாப்பு வழங்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.
ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்போது சம்பவம் நடந்த தேதி, நேரம், இடம், சம்பவம் பற்றிய உண்மைத் தகவல்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்களைச் சரியாகக் குறிப்பிட வேண்டும். புகாரைப் பதிவு செய்த பிறகு, அதன் நகலை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை காவல் துறையினர் எல்லையைக் காரணம் காட்டி ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அல்லது துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு மின்னஞ்சல்/தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் வழியாகவோ புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்க வைக்க முடியும்.
சமீபத்தில் நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்தியபோது, பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய பெண் மீது டெல்லி காவல்துறை ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றியது குறிப்பிடத்தகுந்தது. காவல்துறையினர் எல்லை வரம்பைக் காரணம் காட்டித் தட்டிக்கழிப்பதைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் இந்த ஜீரோ எஃப்.ஐ.ஆர் மிக முக்கியமான சட்டப் பாதுகாப்பாக விளங்குகிறது.
