தற்போது வளர்ந்து வரும் நவீன மருத்துவமும் அறிவியல் தொழில்நுட்பமும் மனிதனைப் பல நோய்களிலிருந்து பாதுகாத்து ஆயுளை அதிகரிக்கப் பெரிதும் உதவுகின்றன. இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உள்ளது. ஆமைகள் 80 முதல் 200 ஆண்டுகள் வரையும், பாம்புகள் 10 முதல் 25 ஆண்டுகள் வரையும் வாழ்கின்றன. அதுபோல மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 75 ஆண்டுகள் என்றாலும், சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளைப் பின்பற்றினால் 100 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ முடியும்.
மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ முதன்மையான தேவை தினமும் உடற்பயிற்சி செய்வதாகும். தினசரி உடற்பயிற்சி உடலுக்கு நல்ல வலிமையைத் தருவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கி எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இதன் மூலம் எலும்புகள் வலுவடைந்து, உடல் எப்போதுமே கட்டுக்கோப்பாகவும் அதிக ஆற்றலுடனும் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு இணையான முக்கியத்துவம் மன ஆரோக்கியத்திற்கும் உண்டு. எப்போதும் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தியானம், மூச்சுப்பயிற்சி அல்லது புத்தகம் படித்தல் போன்ற பழக்கங்களை மேற்கொள்ளலாம். மேலும் நம்மை ஊக்கப்படுத்தும் நல்ல மனிதர்களோடு வலுவான உறவுகளை வைப்பது மனதிற்கு மகிழ்ச்சியையும் உணர்வு ரீதியான ஆதரவையும் தரும்.
தினமும் புதிய விஷயங்களையும் நவீன தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வது மூளையின் செயல்பாட்டை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன் வயதான காலத்தில் ஏற்படும் மூளை தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கும்.
கடைசியாக, நாம் சாப்பிடும் உணவே நம் ஆயுளைத் தீர்மானிக்கிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் சத்தான கொழுப்பு உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சத்துள்ள உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின்றி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
