சுற்றுலா என்றாலே அழகான கடற்கரை, மலைப்பகுதி, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் என ரசிப்பதற்கான தலங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் உலகில் இயற்கையின் கடுமையான சூழலையும், ஆபத்தான நிலப்பரப்புகளையும் நேரில் அனுபவிக்க விரும்பும் சாகசப் பயணிகளுக்கென்றே சில இடங்கள் உள்ளன. பெரு நாட்டின் லா ரின்கோனாடா முதல் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் வரை, இந்த இடங்கள் சாதாரண சுற்றுலாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகின்றன.

பெருவில் கடல் மட்டத்திலிருந்து 16,732 அடி உயரத்தில் அமைந்துள்ள லாரின்கோனாடாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கடுமையான குளிர் நிலவுகிறது. நார்வேயின் ட்ரோல்டுங்கா, மலையின் விளிம்பில் நீண்டு நிற்கும் பாறை அமைப்பால் சாகசப் பயணிகளைக் கவர்கிறது. இதை அடைய கடினமான நிலப்பரப்பில் 8 முதல் 10 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதேபோல், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு உடல் தகுதி, தொழில்நுட்பத் திறன் மற்றும் மன உறுதி ஆகியவை அவசியம்.

பூமியின் கடுமையான சூழல்களை எதிர்கொள்ளும் இடங்களும் இந்தப் பட்டியலில் உள்ளன. கிரீன்லாந்தின் இடோகோர்ட்டூர்மிட் நகரம் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் கடல் பனியால் சூழப்பட்டிருக்கும். கலிபோர்னியாவின் டெத் வேலி கடுமையான வெப்பத்துக்குப் பெயர் பெற்றது. பொலிவியாவின் வடக்கு யுங்காஸ் சாலை குறுகிய மலைப்பாதையாக இருப்பதால் சவாலான பயணத்தை வழங்குகிறது. ஜப்பானின் ஒகுனோஷிமா தீவு அதிக எண்ணிக்கையிலான முயல்களால் புகழ்பெற்றதுடன், அதன் வரலாற்றுப் பின்னணியும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, நியூசிலாந்துக்கு அருகிலுள்ள நியு தீவு, ஐஸ்லாந்தின் எரிமலைப் பகுதி, எகிப்தின் செங்கடலில் உள்ள ப்ளூ ஹோல், தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள கெர்குலென் தீவுகள், எத்தியோப்பியாவின் தனக்கில் பள்ளங்கள் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலின் வட துருவப் பகுதி ஆகியவையும் சாகசப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் இடங்களாக உள்ளன. ஆனால் இவற்றில் பல பகுதிகள் கடுமையான வானிலை, தொலைதூரப் பயணம் அல்லது ஆபத்தான நிலப்பரப்பைக் கொண்டவை என்பதால், உரிய திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பயணம் செய்வது சரியானதல்ல.