உலகின் அதிநவீன புல்லட் ரயில்களையும், அதன் கண்கவர் வளர்ச்சியையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சீனாவின் சாதாரண மற்றும் பொதுப் பிரிவு ரயில்களின் உண்மையான நிலை எப்படி இருக்கிறது என்பதை என்றாவது பார்த்ததுண்டா? இந்தியாவின் லோக்கல் மற்றும் பொதுப் பெட்டிகளில் நிலவும் கூட்ட நெரிசலையே மறந்துவிடும் அளவிற்கு, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சீனாவின் ஒரு ரயிலின் காணொளி இணையவாசிகளைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரயிலின் தரைப்பகுதியில் படுத்துத் தூங்கும் பயணிகள், பெட்டிக்குள் பரவிக் கிடக்கும் சிகரெட் புகை மற்றும் மடிக்கக்கூடிய நாற்காலிகள் என சீனாவின் இந்த ரயிலின் உள்நாட்டு நிலவரம் இந்தியர்களை வியப்படையச் செய்துள்ளது.
பிரபலப் பயண யூடியூபரான ‘நோமாட் சுபம்’ தனது சீனா பயணத்தின்போது அங்குள்ள ஒரு சாதாரண ரயிலின் உட்புறக் காட்சிகளைத் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். “வாங்க, உங்களுக்கு சீனாவின் ஜெனரல் ரயிலின் உண்மையான நிலைக் காட்டுகிறேன், இவர்கள் மொத்தக் பெட்டியையும் புகையாக மாற்றி வைத்துள்ளனர்” என்று கூறியபடியே வீடியோவைத் தொடங்குகிறார் சுபம்.
View this post on Instagram
வைரலாகும் அந்த வீடியோவில், மூடப்பட்ட கதவுகள் கொண்ட குளிர்சாதன பெட்டிக்குள் ஆண்களும் பெண்களும் வெளிப்படையாகச் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், ரயிலில் புகைப்பிடிக்க அனுமதி உள்ளதா என்று சுபம் கேட்க, அவரும் எந்தத் தயக்கமும் இன்றி ‘ஆம்’ என்று பதிலளிக்கிறார். பெட்டி முழுவதும் சூழ்ந்துள்ள அடர்த்தியான சிகரெட் புகையால் அங்கே மூச்சுவிடுவது கூட சிரமமாக இருப்பதாக யூடியூபர் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.
கேமரா ரயிலின் மற்ற பகுதிகளுக்கு நகரும்போது சீனாவின் பொதுப் போக்குவரத்தின் மற்றொரு முகம் அங்கே வெளிப்படுகிறது. ரயிலில் எங்கு பார்த்தாலும் அத்தகையக் கூட்டம் நிறைந்திருப்பதால், வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகள் தரையிலேயே பாய்களை விரித்துப் படுத்துள்ளனர். உச்சக்கட்டமாக, ஒரு பயணி கீழ் படுக்கைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளிக்குள் முழுக் உடலையும் நுழைத்துத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து சுபமும் அதிர்ந்து போகிறார். “இது எக்ஸ்ட்ரீம் லெவல், இந்தியாவில் கூட நான் இதுபோன்ற ஒரு காட்சியைப் பார்த்ததில்லை” என்று அவர் வியக்கிறார். இதுமட்டுமின்றி, சில பயணிகள் கழிவறைக்குச் செல்லும் பாதையை முழுமையாகத் தடுத்து அடைத்துக் கொண்டுள்ளனர்.
இருக்கை கிடைக்காதவர்கள் தங்களோடு பிளாஸ்டிக் அல்லது துணியால் ஆன ஃபோல்டிங் நாற்காலிகளை எடுத்துவந்து ரயிலில் பயணம் செய்வதை வீடியோ காட்டுகிறது. ரயிலின் நடைபாதையில் சிலர் தங்களது சொந்த நாற்காலிகளைப் போட்டு அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.
சுபத்தின் கருத்துப்படி, அங்குள்ள ஜெனரல் ரயில்களின் சூழல் கிட்டத்தட்ட இந்தியாவைப் போலவே இருந்தாலும், அதில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் உள்ளன. முதலாவதாக, மலிவான இந்த ஜெனரல் பெட்டியும் ஏசி வசதியைக் கொண்டுள்ளது; இரண்டாவதாக, இதன் அனைத்துக் கதவுகளும் ஜன்னல்களும் எப்போதுமே முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
‘@thebharatpost_’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ இன்டர்நெட்டில் காட்டுத் தீ போல பரவியது. இதனைப் பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பயனர், “இதோ பாருங்கள், சீனாவின் வளர்ச்சி மாடல் மீண்டும் அம்பலமாகிவிட்டது” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவரோ, “அங்குள்ள மக்களின் குடிமை உணர்வையும் சேர்த்துப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று விமர்சித்துள்ளார். மற்றொரு பயனரோ, “எது எப்படியாயினும், குறைந்தபட்சம் அவர்களின் ஜெனரல் பெட்டியாவது ஏசி பெட்டியாக இருக்கிறதே” என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
