ஹாங்காங்கின் பொக் புலாம் ப குதியில் உள்ள புகழ்பெற்ற ஒரு  சொகுசு குடியிருப்பு வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை காலை நிகழ்ந்த திடீர்  தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்று காலை சுமார் 9 மணியளவில், அந்த வளாகத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞர் ஒருவர், சட்டை அணியாமலும், காலணி அணியாமலும், அரை நிர்வாண கோலத்தில்  கையில் கத்தியை ஏந்தியபடி தனது வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அமைதியான அந்த காலை வேளையில் அவர் திடீரென கத்தியுடன் வலம் வந்ததைக்கண்டு குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த நபர், அவ்வழியாகச் சென்ற ஒருவரை நோக்கி திடீரென கத்தியுடன் பாய்ந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த நபர் சுதாரித்துக்கொண்டு தப்பியோடியதால் காயமின்றி உயிர் தப்பினார். இதனைக் கண்ட அந்தப் பகுதி காவலாளி உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, இருவருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இதற்கிடையில், அவசரகால அலாரத்தைக் கேட்டு அங்கு ஓடிவந்த மற்ற காவலாளிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர்.

அந்தக் களேபரத்திற்கு இடையில் அங்கிருந்து நகர்ந்த அந்த நபர், அந்த வழியாகச் சென்ற வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவரைப் பின்னால் இருந்து கத்தியால் குத்தியுள்ளார். இதனால் நிலைமை மேலும் தீவிரமானது. உடனே உஷாரடைந்த காவலாளிகளும் பொதுமக்களும் துணிச்சலாகச் செயல்பட்டு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கயிற்றால் கட்டிப்போடுவது போல பத்திரமாகப் பிடித்துக் கட்டுப்படுத்தினர். அதற்குள் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரைத் துரிதமாகக் கைது செய்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த வீட்டுப் பணிப்பெண் மற்றும் காவலாளி இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் காயமடைந்த நிலையில் ஒரு வளர்ப்புப் பூனை சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டனர். உடனடியாக அந்தப் பூனை மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டது. பூனைக்கு ஏற்பட்ட காயம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்றாலும், அந்த இளைஞர் மனநலப் பாதிப்பு காரணமாகவே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் ஹாங்காங் குடியிருப்புப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.