உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்திலும், உலகின் ஏதோ ஒரு மூலையில் பெண்களின் அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே பெருத்த அவமானமாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்தே, பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, பெண் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையிலான அவர்களின் தொடர் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

​இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானில் நிலவும் பெண் கல்வி குறித்த நெஞ்சை பிழியும் அதிர்ச்சித் தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு வெளியிட்டுள்ளது. தலிபான்கள் விதித்துள்ள கொடூரக் கட்டுப்பாடுகளின் காரணமாக, ஆப்கானிஸ்தானில் சுமார் 24 லட்சம் சிறுமிகள் 8-ஆம் வகுப்பிற்கு மேல் மேல்நிலை படிப்பைத் தொடர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. பெண் கல்வி முற்றிலும் முடக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலை, அந்த நாட்டின் எதிர்காலத்தையே பெரும் இருளில் தள்ளியுள்ளது.

​மேலும் இந்த எண்ணிக்கை நிலையாக இல்லாமல், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் 2 லட்சம் அதிகரித்து இருப்பதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. தலிபான்களின் இந்த முட்டுக்கட்டையும் அடக்குமுறையும் இதே சூழலில் தொடருமானால், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டக்கூடும் என யுனெஸ்கோ தனது ஆழ்ந்த கவலையையும் எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளது. இந்தத் தரவுகள் ஆப்கான் சிறுமிகளின் எதிர்காலம் எந்த அளவிற்கு ஆபத்தானப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

​இன்றைய நவீன காலகட்டத்தில், உலகிலேயே பெண்களுக்குக் கல்வியை முற்றிலும் மறுக்கும் ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் மட்டுமே திகழ்கிறது என்ற கசப்பான உண்மையையும் யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. வகுப்பறைக்குச் சென்று பாடம் படிக்க வேண்டும், சமூகத்தில் நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற பல லட்சம் ஆப்கான் சிறுமிகளின் கனவுகள் தலிபான் ஆட்சியின் இரும்புக்கரங்களால் நசுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அமைப்புகளின் பலகட்ட கோரிக்கைகளையும் மீறி, ஆப்கானில் பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்படுவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.