சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் வித்தியாசமான விடியோக்கள், உண்மையா அல்லது பொய்யா என்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சீனாவில் ஒருவர்  டீயில் உயிருடன் இருக்கும் தவளையை போட்டு குடிப்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்ததுடன், சீனர்களின் உணவுப் பழக்கம் குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த விடியோவை இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரலான விடியோவில், ஒரு கண்ணாடிக் கோப்பைக்குள் தவளை இருப்பதும், அதில் இருக்கும் திரவத்தை ஒருவர் ஸ்ட்ரா மூலம் குடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, “சீனாவில்  டீயில் உயிருடன் தவளையைப் போட்டு குடிக்கிறார்கள்” என்ற தகவல் வேகமாகப் பரவியது. சிலர் இதை மிகவும் அருவருப்பான செயல் என்றும், ஒரு நாட்டின் உணவுக் கலாசாரத்துடன் இதை தொடர்புபடுத்தியும் கருத்துகளைப் பதிவிட்டனர். ஆனால், வைரலாகும் இந்தக் கூற்று உண்மையா என்பதைச் சரிபார்த்தபோது வேறு ஒரு தகவல் தெரியவந்துள்ளது.

 

உண்மையில், சீனாவிலோ அல்லது வேறு எந்த நாட்டின் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலோ உயிருடன் இருக்கும் தவளையை பானத்தில் போட்டு குடிக்கும் நடைமுறை இருப்பதாக ஆதாரம் இல்லை. சில ஆசிய நாடுகளில் தவளை சமைத்து உணவாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் இருக்கலாம். ஆனால், வைரல் விடியோவில் காட்டப்படுவது போன்ற முறையை ஒரு நாட்டின் வழக்கமான உணவுக் கலாசாரம் என்று கூறுவது தவறானது என fact-check தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வீடியோவை வைத்து ஒட்டுமொத்த நாட்டின் உணவுப் பழக்கத்தைப் பற்றி முடிவு செய்வதும் சரியல்ல.

விடியோவை உன்னிப்பாகப் பார்க்கும்போது, அந்த நபர் உண்மையில் தவளை இருந்த இடத்திலிருந்து எந்த திரவத்தையும் குடிக்கவில்லை என்பதும், ஸ்ட்ராவை வைத்து குடிப்பது போல நடித்திருப்பதும் தெரியவருகிறது. அதிக பார்வைகள், லைக்குகள் மற்றும் கவனத்தைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விளம்பரத் தன்மை கொண்ட செயல் என இந்த வீடியோ குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வேகமாகப் பரவுவதால், அவற்றை உடனடியாக நம்பாமல் உண்மைத் தன்மையைச் சரிபார்ப்பது அவசியம்.