அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்ட ஒயிட் ஹவுஸ் வெள்ளை மாளிகைத் நிகழ்ச்சி ஒன்றில், அவருக்கு அருகில் நின்ற பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் திடீரெனப் பெரும் விவாதப் பொருளாகவும், இணையச் செய்திகளிலும் வைரலாகவும் மாறினார். அந்தப் பெண்ணின் உடல்மொழி குறித்து இணையவாதிகள் பரப்பிய விசித்திரமான வதந்திகளும், அதற்குப் பின்னால் உள்ள உண்மைகளும் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

சமீபத்தில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் நிகழ்வில், அதிபர் டிரம்ப் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் ஆகியோர் கூட்டாகக் கலந்துகொண்டனர். குழந்தைகள் தடுப்பூசி பரிந்துரைகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டபோது, அவருக்கு அருகில் கன்சர்வேடிவ் ஊடகத்துறை நிர்வாகியும், முன்னாள் வெள்ளை மாளிகை ஊழியருமான ஜெய்மி லீக் ஃபிராங்க்ளின்  நின்றிருந்தார்.

அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், ஃபிராங்க்ளின் தொடர்ந்து தலையாட்டியபடியும், தனது கையை வயிற்றுக்கு அருகில் வைத்தபடியும் காணப்பட்டார். இந்தச் சாதாரண உடல்மொழியைத் தவறாகப் புரிந்துகொண்ட சில இணையவாசிகள், டிரம்ப் கவனம் சிதறும்போது அவரைத் தூண்டுவதற்காக ஃபிராங்க்ளின் தனது கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சாதனம் மூலம் அதிர்ச்சி அளிக்கிறார் என்று விசித்திரமான தகவலை பரப்பினர். இணையத்தில் இது பலரால் வேடிக்கையாகவும் மீம்ஸ்களாகவும் பகிரப்பட்டது.

இந்த அபத்தமான வதந்திகள் இணையத்தில் காட்டுத் தீ போலப் பரவியதை அடுத்து, ஜெய்பி லீக் ஃபிராங்க்ளின் உடனடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமூக வலைதளத்தில் பரவிய ஒரு பதிவை மேற்கோள் காட்டிப் பதிலளித்த அவர், அட வித்தியாசமானவர்களே நான் கர்ப்பமாக இருக்கிறேன். அதனால்தான் தனது கையை வயிற்றுக்கு அருகில் வைத்திருந்ததாகவும் நகைச்சுவையாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தார். இந்த எளிய மற்றும் உண்மையான காரணத்தால் அந்த வதந்திக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், டிரம்ப்புடன் ஓவல் அலுவலகத்தில் கலந்துகொண்டதை நினைத்து தான் “பெருமை” கொள்வதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

 

 

ஃபிராங்க்ளின் அரசியலில் புதியவர் அல்ல; அவர் அமெரிக்காவின் கன்சர்வேடிவ் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் அறியப்பட்ட முகம். இவர் இதற்கு முன்பு 2020-ஆம் ஆண்டு டிரம்ப் பிரச்சாரக் குழு மற்றும் முதல் டிரம்ப் வெள்ளை மாளிகை நிர்வாகத்தில் பணியாற்றியுள்ளார். அமெரிக்க செனட் சபை மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் சார்ந்த பணிகளிலும் அனுபவம் பெற்றுள்ளார்.

தற்போது இவர், பெண்களுக்கான கன்சர்வேடிவ் ஊடக மற்றும் வாழ்க்கை முறை தளமான ‘தி கன்சர்வேடிவ்’ நிறுவனத்தின் நிறுவனராகவும் தலைமைச் செயலதிகாரியாகவும்  உள்ளார். பெண்மை மற்றும் பழமைவாத மதிப்புகளை மையமாகக் கொண்டு 2020-இல் இவரால் தொடங்கப்பட்ட தளம் இதுவாகும்.