பாகிஸ்தானின் நிதி மற்றும் ராணுவ நிர்வாகம் மீது அமெரிக்கா மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான நிதிக் கையேடு மற்றும் வெளிப்படைத்தன்மை அறிக்கையில், பாகிஸ்தான் தனது ராணுவம் மற்றும் உளவுத்துறையான ISI-க்கு எவ்வளவு நிதியைச் செலவிடுகிறது என்பதற்கான முழுமையான கணக்கையும், வெளிப்படைத்தன்மையையும் உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ராணுவ மற்றும் உளவுத்துறை சார்ந்த வரவு-செலவுத் திட்டங்களை நாடாளுமன்றம் மற்றும் குடிமக்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா கடுமையாகக் கோரியுள்ளது. அரசாங்கத்தின் கடன் தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவதோடு, உரிய காலத்தில் பட்ஜெட் அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் கடந்த 2025-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சுமார் 67 முதல் 78 மில்லியன் டாலர் வரை பொருளாதார உதவி வழங்கியுள்ளது. மேலும், 2026 ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து 10 பில்லியன் டாலர் அளவுக்கு நாணய நிலைப்புத்தன்மை உதவி கோரப்பட்டுள்ளது. அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே அமெரிக்கா இந்தக் கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய பட்ஜெட்டின்படி, பாகிஸ்தான் தனது பாதுகாப்புத் துறைக்காக மட்டும் தோராயமாக 3 டிரில்லியன் ரூபாயை அதாவது ரூ.3.01 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டின் ஆரம்ப பட்ஜெட்டைக் காட்டிலும் சுமார் 17.6 முதல் 17.7 சதவிகிதம் அதிகமாகும். நாட்டின் மொத்த பட்ஜெட்டான 18.77 – 18.8 டிரில்லியன் ரூபாயில், சுமார் 16 சதவீதப் பணத்தை பாகிஸ்தான் தனது ராணுவப் பயன்பாட்டிற்காக மட்டுமே செலவழித்து வருவது குறிப்பிடத்தக்கது.
