இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃபின் மகனும், இளம் வீரருமான ராக்கி பிளின்டாஃப், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் வரலாற்றுச் சதத்தை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஒருநாள் கோப்பை தொடரில் விளையாடி வரும் 18 வயதுடைய ராக்கி பிளின்டாஃப் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய அவர், பவுலர்களை நாலாபுறமும் சிதறடித்து வெறும் 65 பந்துகளில் தனது முதல் சதத்தைக் கடந்தார். ஒட்டுமொத்தமாக 76 பந்துகளை எதிர்கொண்ட அவர், 10 பவுண்ட்ரிகள் மற்றும் 7 பிரம்மாண்டமான சிக்சர்களுடன் 123 ரன்களைக் குவித்து அசத்தினார்.
இந்தத் அதிரடி ஆட்டத்தின் மூலம், இங்கிலாந்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஏன் அவரை அழைக்கிறார்கள் என்பதை ராக்கி பிளின்டாஃப் நிரூபித்துக் காட்டியுள்ளார். இவருடன் இணைந்து மற்றொரு தொடக்க வீரரான கீட்டான் ஜென்னிங்ஸ் 127 பந்துகளில் 156 ரன்கள் விளாசினார்.
Rocky on the attack! 🚀
Flintoff dispatches a four and a six in consecutive balls as he looks to keep upping our run rate!
🌹 #RedRoseTogether pic.twitter.com/dITNQwguZx
— Lancashire Cricket (@lancscricket) August 11, 2026
ராக்கி பிளின்டாஃப்பின் கிரிக்கெட் பயணம் இதுவரை சற்று மெதுவான வேகத்தில்தான் நகர்ந்து வந்தது. அவர் இதுவரை 5 முதல் தர போட்டிகளில் விளையாடி 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தனது 15-வது ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் அதிரடியாகச் சதம் அடித்து தனது கம்பேக்கை பதிவு செய்துள்ளார். வழக்கமாக அவரது ஸ்டிரைக் ரேட் 72 என்ற அளவில் இருக்கும் நிலையில், இந்தச் சதத்தின் மூலம் 160-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது தந்தையான ஆண்ட்ரூ பிளின்டாஃப், இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,845 ரன்களும் 226 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 3,394 ரன்களும் 169 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலகச்சிறந்த ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தவர். தற்போது அவரது மகன் ராக்கி பிளின்டாஃப் தந்தையின் புகழை மிஞ்சும் வகையில் தனது கிரிக்கெட் பயணத்தில் அடியெடுத்து வைத்திருப்பது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
