சாலைகளில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ‘வி2வி’ எனப்படும் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘வாகனம் டு வாகனம்’ என்ற அடிப்படையில் செயல்படும் இந்த அமைப்பு, அருகில் உள்ள வாகனங்களுக்கு இடையே முக்கியமான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வரைவு விதிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறையின்படி, 2028-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தயாரிக்கப்படும் அனைத்து புதிய வாகனங்களிலும் ‘வி2வி’ தகவல் தொடர்பு அமைப்பைப் பொருத்துவது கட்டாயமாகும். ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், லாரி உள்ளிட்ட அனைத்து வகையான புதிய வாகனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இறுதி விதிமுறைகள் பொதுமக்கள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் வகுக்கப்பட உள்ளன.

இந்த தொழில்நுட்பம் ரேடியோ சிக்னல்களைப் பயன்படுத்தி செயல்படும். வாகனத்தின் வேகம், இருப்பிடம், செல்லும் திசை, பிரேக் போடப்பட்டுள்ளதா உள்ளிட்ட தகவல்களை அருகில் உள்ள வாகனங்களுடன் பரிமாறிக்கொள்ள முடியும். சுமார் 150 மீட்டர் முதல் 900 மீட்டர் வரையிலான தொலைவில் இந்த சிக்னல்கள் கிடைக்கும். இதற்கு செல்போன் நெட்வொர்க் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் போட்டால், அந்த தகவல் பின்னால் வரும் வாகனத்துக்கு உடனடியாகச் சென்றடையும். இதன் மூலம் ஓட்டுநர் முன்கூட்டியே வேகத்தைக் குறைத்து விபத்தைத் தவிர்க்க முடியும். மேலும், தவறான பாதையில் வரும் வாகனங்கள், பின்னால் வரும் ஆம்புலன்ஸ், திடீர் பாதை மாற்றம் மற்றும் வளைவுகளில் இருந்து வரும் வாகனங்கள் குறித்தும் எச்சரிக்கை கிடைக்கும். ஏற்கெனவே உள்ள கேமரா, சென்சார் அடிப்படையிலான ஓட்டுநர் உதவி அமைப்புகளுடன் இணைந்தும் இந்த தொழில்நுட்பம் செயல்பட உள்ளது.