ஹோட்டல் என்றால் கான்கிரீட் கட்டடம், அறைகள், படுக்கைகள் என வழக்கமான அமைப்புதான் நினைவுக்கு வரும். ஆனால் ஸ்வீடனில் இருக்கும் ஒரு ஹோட்டல் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. சுமார் 6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பனிக்கட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய ஐஸ் ஹோட்டலாக குறிப்பிடப்படுகிறது.
வடக்கு ஸ்வீடனில் உள்ள ஜுக்காஸ்ஜார்வி என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகே ஓடும் டோர்ன் ஆற்றில் இருந்து கிடைக்கும் பனிக்கட்டிகளே இதன் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஹோட்டலின் உள்ளே வெப்பநிலை சுமார் மைனஸ் 5 டிகிரி செல்சியஸாக பராமரிக்கப்படுகிறது. விருந்தினர்களுக்கு கடும் குளிரைத் தாங்கும் சிறப்பு ஆடைகளும் வழங்கப்படுகின்றன.
பனியால் உருவாக்கப்பட்டிருந்தாலும், இது வெறும் தங்கும் இடமாக மட்டும் இல்லை. பிரம்மாண்டமான ஆர்ட் ஹால், ஐஸ் கேலரி, டீலக்ஸ் அறைகள், ஐஸ் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இங்கு உள்ளன. உலகின் பல பகுதிகளில் இருந்து வரும் கலைஞர்கள் பனிக்கட்டிகளைச் செதுக்கி, ஒவ்வொரு ஆண்டும் ஹோட்டலின் உட்புறத்தை புதிய வடிவில் உருவாக்குகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஹோட்டலின் தோற்றம் வித்தியாசமாக மாறுகிறது.
இந்த ஹோட்டலின் மிகப்பெரிய சிறப்பு, அது நிரந்தரமாக ஒரே வடிவில் இருப்பதில்லை என்பதுதான். குளிர்காலத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கி ஜனவரியில் ஹோட்டல் புதிய வடிவில் தயாராகிறது. வசந்த காலம் வந்ததும் பனி உருகி மீண்டும் டோர்ன் ஆற்றில் கலந்துவிடுகிறது. பின்னர் அடுத்த குளிர்காலத்தில் அதே பகுதியில் புதிய வடிவில் ஐஸ் ஹோட்டல் உருவாக்கப்படுகிறது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
