தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் ‘பசுமை இயக்கம்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பாகத் தமிழகம் முழுவதும் மொத்தம் 50 லட்சம் மரக்கன்றுகளை நட மாபெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தொலைநோக்குப் பார்வையையும், மறைந்த சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கின் இயற்கை சேவையையும் நெஞ்சில் ஏந்தி இந்தப் பசுமைப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களையும் பொதுமக்களையும் ஒருங்கிணைத்து மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதாகும். கலாமின் ‘பசுமை இந்தியா’ கனவையும், விவேக்கின் ‘ஒரு கோடி மரங்கள்’ லட்சியத்தையும் முன்னெடுத்துச் செல்லும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலில் உருவாகியுள்ள இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மரக்கன்றுகள் நடுவது மட்டுமன்றி, அவை தொடர்ந்து வளர்வதை உறுதி செய்யும் வகையில் முறையான பராமரிப்புத் திட்டங்களும் வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளன.
