தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பட்ஜெட் மீதான விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. குறிப்பாக, வேளாண் பட்ஜெட் குறித்த விவாதத்தில் அமைச்சர் வினோத் பேசியதும், அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலடியும் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் குறித்துப் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இதுவொரு ‘வெற்று பட்ஜெட்’ என விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், “இது வெற்று பட்ஜெட் அல்ல; விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட்!” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “எங்கள் ஆட்சிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு, லஞ்சம் இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை முதலமைச்சர் விஜய் தடுத்து காட்டியுள்ளார். தமிழகத்தின் இதயம் எப்போதும் விவசாயிகள் துடிக்கும் இடத்தில்தான் உள்ளது. கடுமையான நிதி நெருக்கடி நிலவினாலும் கூட, விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் மற்றும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையையும் முதலமைச்சர் உயர்த்தி வழங்கியுள்ளார்” என்று பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை 23,399 ஹெக்டேர் பரப்பளவில் 33 சதவீதத்திற்கும் மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனது உரையின் இறுதியில் பேசிய அமைச்சர் வினோத், “அனைவருக்கும் சூரியனால் தான் வேர்த்தது; ஆனால், நீங்கள் (முதலமைச்சர் விஜய்) வந்த பிறகு அந்த சூரியனுக்கே வேர்த்தது!” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
அமைச்சரின் இந்த புகழ்ச்சி உரையை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது வழக்கமான புன்னகையுடன் எழுந்து பதிலடி கொடுத்தார்.
அவர் பேசுகையில், “வேளாண்துறை அமைச்சர் நீண்ட நெடிய விளக்கங்களை மிகக் கூர்மையாக அளித்தார். ஆனால், அவர் உரையின் இறுதியில் ‘சூரியனுக்கே வேர்த்தது’ என்று ஒரு கருத்தைச் சொன்னார். உலகத்தில் எத்தனையோ விஞ்ஞானிகள் எவ்வளவோ முயன்று பார்த்தும், இன்று வரை யாராலும் நெருங்க முடியாத தூரத்தில்தான் சூரியன் இருக்கிறது; ஏன், அங்கே ஒரு ஏவுகணையைக்கூட நம்மால் வெற்றிகரமாகச் செலுத்த முடியவில்லை என்பதை இந்த அவைக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!” என்றார்.
