மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த 31 வயது கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு, சமீபத்தில் விளையாடும் போது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காகச் சென்ற போதுதான், ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது.

அவரது வலது காலைப் பரிசோதித்த மருத்துவர் மிருணால் பிரகாஷ், அவரது முந்தைய மருத்துவ வரலாற்றைக் கேட்டறிந்த போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடும் போதே அந்த வீரருக்கு இடது முழங்காலிலும் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால், அதற்கு முறையான சிகிச்சை எடுக்காமல், ஒரு சாதாரண முழங்கால் பட்டையை (Hinged knee-brace) மட்டுமே மாட்டிக்கொண்டு அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார்.

தற்போது எம்.ஆர்.ஐ (MRI) பரிசோதனை செய்து பார்த்ததில், சமீபத்தில் அடிபட்ட வலது காலில் தசைநார் கிழிவு (ACL Tear) மட்டுமே இருந்தது. ஆனால், 10 வருடங்களாக அவர் கண்டு கொள்ளாமல் விட்ட இடது காலில் தசைநார் கிழிவோடு சேர்த்து, முழங்கால் ஜவ்வு மற்றும் குருத்தெலும்புகள் (Cartilage) மிகக் கொடூரமான முறையில் தேய்மானம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வலது காலை விட இடது கால்தான் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்ததால், மருத்துவர்கள் முதலில் அவரது இடது காலில் தசைநார் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஜவ்வு பழுதுபார்க்கும் பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.

தற்போதைக்கு இடது கால் தேறி வரும் நிலையில், அவரது வலது காலுக்கான அறுவை சிகிச்சை ஜூன் 2026-ன் இறுதியில் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். வலியைக் கண்டு கொள்ளாமல் விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு, இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.