சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நமது சருமப் பராமரிப்பில் மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால், சன்ஸ்கிரீன் தடவினால் மட்டுமே நமது சருமம் முழுமையாகப் பாதுகாப்பக்கப்பட்டுவிடும் என்று கூற முடியாது. அதைச் சரியாகப் பயன்படுத்தாத போது, சருமத்தில் கருமை, சுருக்கம் மற்றும் நிறமாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சன்ஸ்கிரீன் பயன்படுத்தும்போது பலர் செய்யும் முதல் தவறு, மிகக் குறைந்த அளவில் தடவுவதுதான். முகம் மற்றும் கழுத்துப் பகுதிக்கு ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் நீளத்திற்குச் சன்ஸ்கிரீன் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். இரண்டாவதாக, வெயில் அடித்தால் மட்டுமே சன்ஸ்கிரீன் போட வேண்டும் என்று நினைப்பது தவறு; மேகமூட்டமாக இருக்கும் நாட்களிலும், வீட்டிற்குள் இருக்கும்போதும் சூரியனின் கதிர்கள் சருமத்தைப் பாதிக்கும் என்பதால் தினமும் இதைப் பயன்படுத்த வேண்டும்.

மூன்றாவதாக, காலையில் ஒருமுறை தடவிவிட்டு நாள் முழுவதும் விட்டுவிடுவதும் தவறான பழக்கமாகும். வெளியில இருக்கும்போது அல்லது வேர்க்கும்போது குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும். நான்காவதாக, வெறும் SPF அளவை மட்டும் பார்க்காமல், UVA மற்றும் UVB கதிர்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ‘பிராட்-ஸ்பெக்ட்ரம்’ சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஐந்தாவதாக, முகத்திற்கு மட்டும் தடவிவிட்டு காதுகள், கழுத்தின் பின்பகுதி, கைகளின் பின்பகுதி மற்றும் உதடுகளை விட்டுவிடுவார்கள். இந்த இடங்களுக்கும் பாதுகாப்பு அவசியமாகும். ஆறாவதாக, வெயிலில் கிளம்புவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக அவசர அவசரமாகப் போடாமல், சருமத்தில் நன்றாகக் ஊறும் வரை காத்திருந்து பிறகு வெளியே செல்ல வேண்டும்.

ஏழாவதாக, சன்ஸ்கிரீன் மட்டுமே சருமத்தை 100% காப்பாற்றிவிடும் என்று நம்பக்கூடாது. அதிக வெயில் இருக்கும் நேரங்களில் நிழலில் இருப்பது, தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் அணிவது போன்ற கூடுதல் பாதுகாப்புகளையும் கையாள வேண்டும். சன்ஸ்கிரீனை சரியான முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதே ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும்.