தினமும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும். ஆனால், பல மணிநேரம் ஹெல்மெட் அணிவதால் தலைமுடியில் வியர்வை தேங்கிப் பிசுபிசுப்பு, பொடுகு, அரிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உண்மையில், ஹெல்மெட் நேரடியாக முடி உதிர்வை ஏற்படுத்துவதில்லை; சரியான பராமரிப்பின்மை மற்றும் சுத்தமில்லாத ஹெல்மெட்டே முடி கொட்டுவதற்கு முதன்மைக் காரணமாகும்.
ஈரமான தலைமுடியுடன் அல்லது வியர்வையுடன் உடனே ஹெல்மெட் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஈரப்பதம் அதிகரிக்கும் போது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்ந்து தலைமுடியில் அரிப்பை உண்டாக்கும். எனவே, தலைமுடி முழுமையாகக் காய்ந்த பிறகே ஹெல்மெட் அணிய வேண்டும். மேலும், தலையை அதிகம் இறுக்காமலும் தளர்வாக இல்லாமலும் சரியான அளவிலான ஹெல்மெட்டைத் தேர்வு செய்து பயன்படுத்துவது அவசியமாகும்.
ஹெல்மெட்டின் உட்பகுதியில் உள்ள பஞ்சு மற்றும் துணிகளில் வியர்வையும் தூசியும் படிவதால் கிருமிகள் உருவாக வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க, ஹெல்மெட் லைனர்களை வாரத்திற்கு ஒருமுறை துவைத்துப் பயன்படுத்த வேண்டும். அல்லது தலைக்கும் ஹெல்மெட்டிற்கும் இடையே ஒரு சுத்தமான காட்டன் துணியைப் பயன்படுத்துவது வியர்வையை உறிஞ்சி, உராய்வைக் குறைக்க உதவும். அதோடு, மற்றவர்களின் ஹெல்மெட்டைப் பயன்படுத்துவதையோ, உங்கள் ஹெல்மெட்டைப் பிறருக்குக் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
வெளியில் சென்று வந்ததும் ஹெல்மெட்டைக் கழற்றித் தலைக்குச் சிறிது நேரம் காற்றுப் பட விட வேண்டும். வியர்வையைச் சுத்தமான துண்டால் மெதுவாகத் துடைக்க வேண்டும். தினமும் ஹெல்மெட் அணிபவர்கள் வாரத்திற்கு 2 முதல் 3 முறை மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடிய அலசி, வேர்களில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். மேலும், ஹெல்மெட் அணிவதற்கு முன் தலையில் தடிமனான எண்ணெய் அல்லது ஜெல் தடவுவதைத் தவிர்ப்பது நல்லது.
ஹெல்மெட் அணிவதால் மட்டுமே நிரந்தர வழுக்கை ஏற்படும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே முடி கொட்டும் என்ற பயத்தில் ஹெல்மெட் அணிவதைத் தவிர்க்கக் கூடாது. முறையான முடி பராமரிப்பையும் ஹெல்மெட் சுகாதாரத்தையும் பின்பற்றிப் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதே சிறந்தது. கடுமையான முடி உதிர்வு இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
