பெரியதாக எந்தப் பிரச்சினையும் இல்லாத நாள்களிலும், மாலை நேரத்தில் உடல் மற்றும் மனம் முற்றிலும் சோர்வடைவதை நாம் உணர்ந்திருப்போம். போதிய தூக்கம், பரபரப்பான வேலை அட்டவணை போன்ற வெளிப்படையான காரணங்களைத் தாண்டி, நமக்குத் தெரியாமலேயே நமது ஆற்றலை மெதுவாக உறிஞ்சும் சில அன்றாடப் பழக்கவழக்கங்களே இந்தச் சோர்வுக்கு முக்கியக் காரணமாகின்றன.
முதலாவதாக, முடிந்துபோன உரையாடல்களை மனதிற்குள் மீண்டும் மீண்டும் அசைபோடுவது உணர்ச்சிப் பூர்வமான ஆற்றலை வீணடிக்கிறது. எல்லாவற்றிற்கும் விளக்கம் தேடாமல் சில தருணங்களைக் கடந்து செல்வதே மன அமைதிக்கு நல்லது. இரண்டாவதாக, உங்களைச் சுற்றியுள்ள அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிப்பதும், அவர்களின் உணர்ச்சிச் சுமைகளை நீங்கள் தாங்குவதும் உங்களை மனரீதியாகச் சோர்வடையச் செய்யும்.
மூன்றாவதாக, ஒவ்வொரு கணமும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஓய்வு நேரங்களில் குற்றவுணர்ச்சி கொள்வது தவறாகும். எந்நேரமும் போனைப் பார்ப்பது, எதையாவது கேட்பது என இரைச்சலால் நிரப்பாமல், மனதிற்கு அமைதியான வெறுமையான இடங்களைக் கொடுப்பது அவசியமாகும். நான்காவதாக, ‘அடுத்து என்ன நடக்கும்’ என்று எதிர்கால இலக்குகளை மட்டுமே நினைத்து மகிழ்ச்சியைத் தள்ளிப்போடுவதால், நிகழ்காலத்தின் சிறிய அழகிய தருணங்களை நாம் தவறவிடுகிறோம்.
ஐந்தாவதாக, அனைவருக்கும் எப்போதும் கிடைக்கக்கூடிய நபராக இருப்பது உங்களின் சொந்த ஆற்றலைக் குறைத்துவிடும். உடனடிப் பதில்கள் அளிப்பது, நள்ளிரவு அழைப்புகளை ஏற்பது என எந்நேரமும் பிறருக்காகவே இயங்கும்போது உங்களுக்கான நேரம் இல்லாமலே போய்விடும். ‘இன்று வேண்டாம்’ என்று மறுப்பதோ அல்லது சற்று இடைவெளி எடுப்பதோ சுயநலமல்ல, அது சுயமரியாதையின் அடையாளம்.
எனவே, இந்த 5 எளிய பழக்கவழக்கங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம், உங்கள் மன அமைதியையும் ஆற்றலையும் பாதுகாத்து தினமும் புத்துணர்ச்சியோடு வாழ முடியும்.
