ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 12 வயது சிறுமி ஒருவர் தனது பக்கத்து வீட்டுப் பெண் மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது.
அந்தப் பெண் சிறுமியைத் தனது வீட்டிற்கு அடிக்கடி வரவழைத்து, ஆன்லைன் லைவ் வீடியோ சாட்டிங் ஆப் (App) மூலமாகப் பல ஆண்களுடன் வீடியோ காலில் இணைத்து, அசிங்கமான செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாக அந்தச் சிறுமி பகீர் புகாரைக் கிளப்பியுள்ளார்.
வீடியோ காலில் ஆபாசம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தப் பெண்ணின் ஆன்லைன் கணக்கில் “டைமண்ட்ஸ்” எனப்படும் டிஜிட்டல் பணம் குவிந்ததாகவும், அதை அவர் பணமாக மாற்றி வந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 28 அன்று சிறுமியின் அம்மாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டு, அந்தப் பெண்ணின் வீட்டிற்குப் பின்னாடியே சென்றபோதுதான் இந்த அசிங்கமான ஆன்லைன் அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து ஏப்ரல் 6-ஆம் தேதியே போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை எனக் கூறி கடந்த ஜூன் 15 அன்று சிறுமியின் குடும்பத்தினர் சமூக வலைத்தளத்தில் நேரலையில் வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்தச் சூழலில், தற்போது அந்தச் சிறுமி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு வாயை மூடி சும்மா இருப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்ட தரப்பில் இருந்து தனக்கு 40 லட்சம் ரூபாய் தருவதாகப் பேரம் பேசி மிரட்டுவதாகக் குமுறியுள்ளார்.
எதிர் தரப்பினர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பயங்கரமாகத் தீப்பிடித்து எரிவதால், தற்போது இந்த வழக்கின் தீவிர விசாரணையை அம்பாலா மாவட்ட டிஎஸ்பி-யிடம் ஒப்படைத்துக் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.
