இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் தயாரிக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்களது தினசரி வாழ்க்கையின் சின்னஞ்சிறு தருணங்களைக்கூட கேமராவில் பதிவு செய்து இன்டர்நெட்டில் பகிர்வதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், சில சமயங்களில் சில செகண்ட்ஸ் வீடியோக்களுக்காகவும், லைக்குகளுக்காகவும் மக்கள் காட்டும் கவனக்குறைவு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியக்கூடும். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு பாலத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ ஒன்றைத் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எந்த இடத்திலும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் துளியும் யோசிக்காமல், கேமராவை மட்டுமே முழு கவனத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

ஆனால், அனைவரையும் பதைபதைக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்ணின் அருகில் அவளது பிஞ்சுக் குழந்தை உள்ளது. அந்த குழந்தை திடீரென பாலத்தின் விளிம்புக்கு சென்ற நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர் ஓடி வந்து குழந்தையை தூக்கினார். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு குழந்தையின் உயிர் காக்கப்பட்டது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. “ரீல்ஸ் செய்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், அதற்காக ஒரு உயிரின் பாதுகாப்பை, அதுவும் ஒரு பச்சிளம் குழந்தையின் பாதுகாப்பை பணயம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று பலரும் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும், தங்களது வீடியோக்களுக்கு அதிக வியூவ்ஸ் கிடைக்க வேண்டும் என்ற வெறியில் பலர் தங்களைச் சுற்றியிருக்கும் ஆபத்துக்களைத் துளியும் பொருட்படுத்துவதில்லை. சில விநாடிகள் ஓடக்கூடிய இந்த ரீல்ஸ் வீடியோக்கள் தற்காலிக மகிழ்ச்சியைத் தரலாம்  ஆனால், அந்தச் சிறு கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் வாழ்நாள் முழுமைக்கான வலியைத் தந்துவிடும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக உணர்த்தியுள்ளன.