கிரிக்கெட் மைதானம் என்றாலே சிக்சர்களும், பவுண்டரிகளும், வீரர்களின் ஆக்ரோஷமான சண்டைகளும் மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால், களத்தில் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் ஜாலியாகவும், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலும் விளையாடுவதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் எப்போதும் தனித்துவமானவர். இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் செய்த ரகளையான சேட்டை தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்த ரிஷப் பண்ட், இரண்டாவது இன்னிங்சில் சற்று வித்தியாசமான ஆட்ட முறையைக் கையாண்டார். வழக்கமான அதிரடிக்கு மாறாக, ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக விளையாடிய அவர், தான் எதிர்கொண்ட முதல் 21 பந்துகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் டிஃபென்ஸ் மட்டுமே செய்தார். பெவிலியனில் அமர்ந்திருந்த பயிற்சியாளர் கவுதம் கம்பீரே ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது இந்த அமைதியான தொடக்கம் அமைந்தது.
ஆனால், களத்தில் நீண்ட நேரம் காலூன்றிய பிறகு தனது இயல்பான அதிரடி ரூட்டுக்கு மாறினார் பண்ட். பந்துவீச்சாளர்களைப் புரட்டி எடுத்த அவர், அடுத்தடுத்து மூன்று ராட்சத சிக்சர்களை பறக்கவிட்டு மிரள வைத்தார்.
Rishabh Pant is proper entertainer in test cricket 🤣❤️ bro playing football while batting pic.twitter.com/3rSSEQT2Kv
— Ansh (@159atsydney_) August 9, 2026
ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு மிரண்டுபோன இலங்கை சுழற்பந்து வீச்சாளர் திலும் சுடீரா, தனது வியூகத்தை மாற்றினார். பேட்ஸ்மேனை ரன் அடிக்க விடாமல் தடுப்பதற்காக லெக் சைட் திசைகளில் தொடர்ந்து வைடு பந்துகளை வீசத் தொடங்கினார்.
வழக்கமாக இதுபோன்ற பந்துகளை விக்கெட் கீப்பர் கைகளுக்குச் செல்ல அனுமதிப்பார்கள் அல்லது பேட்டால் தடுத்து விடுவார்கள். ஆனால், ரிஷப் பண்ட் கடுப்பாகி வைடு பந்துகளை பேட்டால் அடிக்காமல், தனது காலால் எட்டி உதைத்தார்.
மைதானத்தில் அவர் செய்த இந்த எதிர்பாராத செயல் வர்ணனையாளர்களைச் சிரிக்க வைத்ததுடன், ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. மேலும் போட்டியின் போது நிதானத்தை இழந்து ரிஷப் பந்தை காலால் எட்டி உதைத்து சம்பவம் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் கிரிக்கெட் வட்டாரத்தில் இது தொடர்பான வீடியோ வைரலாகி அதிர வைத்துள்ளது.
