தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கலப்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிரிக்காவின் மாலி நாட்டிற்கு மின் பணியாளராக வேலைக்குச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மாலி நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பேச்சிமுத்து உள்ளிட்ட ஐந்து பேரையும் மாலி நாட்டு பயங்கரவாதிகள் கடத்தியதாகக் கூறப்படுகிறது. கடத்தப்பட்டவர்களில் பொன்னுத்துரை மற்றும் சண்முகம் உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் அண்மையில் தமிழகம் திரும்பிய நிலையில் அவர்கள் பேச்சிமுத்து பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

தன்னுடன் வேலைக்குச் சென்றவர்கள் தாயகம் திரும்பிய போதிலும் தனது கணவர் குறித்த முறையான தகவல் இந்தியத் தூதரகம் வழியாகத் தங்களுக்கு வரவில்லை என்று பேச்சிமுத்துவின் மனைவி காளியம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

தனது கணவரின் கடவுச்சீட்டு மற்றும் விசா மட்டுமே தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்தது உண்மையென்றால் அவரது உடலை மீட்டுத் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரமின்றித் தவிக்கும் தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு நீதி பெற்றுத் தர வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.