டெல்லி சத்தர்பூர் மெட்ரோ நிலையம் அருகே, கடந்த ஜூன் 22-ஆம் தேதி அதிகாலையில் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு நடுவே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை, பாஷு குமார் என்ற கேப் டிரைவர் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பீகாரை சேர்ந்தவரான இவர், கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருகிறார். ஆரம்பத்தில் செக்யூரிட்டி கார்டாக இருந்துவிட்டு பின்னர் கேப் டிரைவராக மாறியுள்ளார்.
சம்பவத்தன்று காரை நடைபாதை அருகே நிறுத்திவிட்டு, சிறுமியைத் தூக்கிக் காரில் போட்டுள்ளார். காரை எடுக்கும்போது தூக்கக் கலக்கத்தில் இருந்த சிறுமி தந்தையைக் கூப்பிட, அவரது தந்தை காரின் பின்னால் ஓடிவந்து தடியை வீசித் தடுக்க முயன்றும், பாஷு குமார் காரை வேகமாக ஓட்டித் தப்பியுள்ளார். காரில் வைத்துச் சிறுமியை மிரட்டிய பாஷு குமார், அவரை ஒரு காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், தனது ஆண்மையின்மை காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்ததால், ஆத்திரத்தில் சிறுமியைத் தடியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தைக் கற்களுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். கொலை செய்த சில மணி நேரங்களிலேயே தனது அறைக்குச் சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டு மீண்டும் கேப் ஓட்ட கிளம்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்ட கார் என்ற ஒரே ஒரு துப்பைக் கொண்டு, அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த டெல்லி போலீசார், கொலையாளி பாஷு குமாரைக் கைது செய்தனர். விசாரணையில், அவரிடம் ஆண்மையின்மை இருப்பது மருத்துவப் பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பீகாரில் வசிக்கும் இவருக்கு 4 வயதிலும் மற்றும் 6 மாதத்திலும் இரண்டு மகன்கள் இருப்பதால், இந்த மருத்துவ அறிக்கை போலீசாருக்குப் பெரும் புதிராக மாறியுள்ளது.
மேலும், இவர் மீது ஏற்கனவே பீகாரில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 5 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அம்பலமாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக டெல்லி போலீஸ் சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
