மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வாலின் மகனும், நிறுவனத்தின் விளம்பர அதிகாரியுமான கேதன் அகர்வால் (26) என்பவருக்கும், உலர் பழங்கள் (Dry fruits) வியாபாரியின் மகளான சீயா கொயல் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 11 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் வரும் நவம்பரில் ராஜஸ்தானில் 17 கோடி ரூபாய் மதிப்பில் அரண்மனை புக் செய்யப்பட்டு, இரண்டு தனி விமானங்கள் மூலம் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. சீயாவும் கேதனுடன் இருக்கும் ரொமாண்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்துள்ளார். ஆனால், சீயா மனரீதியாக இந்த திருமணத்திற்குத் தயாராக இல்லை என்றும், குடும்ப வற்புறுத்தலால் சம்மதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டை விட்டு ஓடிப் போனால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் என அஞ்சிய சீயா, தனது காதலன் சேத்தன் சௌத்ரியுடன் சேர்ந்து கேதனைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். கடந்த மே 31 அன்று கேதனுடன் லோஹகாட் கோட்டைக்கு ட்ரெக்கிங் சென்றபோது, கேதன் ஆபத்தான பகுதியில் அமர்ந்திருந்ததைப் பார்த்து, அவரை மலையிலிருந்து தள்ளிவிட சீயாவுக்கு முதல்முறையாகக் கொலைத் திட்டம் உதித்துள்ளது.

ஜூன் 6 அன்று கேதனின் குடும்பத்துடன் பாலி  தீவுக்குச் செல்லவிருந்த பயணத்தை தடுக்க , கேதனின் பாஸ்போர்ட்டைத் தனியாகத் திருடி வைத்து சீயா தடுத்துள்ளார். பின்னர் ஜூன் 14 அன்று மீண்டும் கோட்டைக்கு அழைத்துச் சென்று கேதனைப் பின்னால் இருந்து தள்ளியுள்ளார். ஆனால், கேதன் மரத்தில் சிக்கி உயிர் தப்பியபோது, அங்குக் பாம்பு இருந்ததாகவும், அவரைக் காப்பாற்றவே தள்ளியதாகவும் சீயா பொய் கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய கேதன், தன் உயிரைக் காப்பாற்றியதே சீயா தான் என வீட்டில் கூறியுள்ளார். எனினும், தனது கொலைத் திட்டத்தை விடாத சீயா, காதலன் சேத்தனுடன் ஒரு கபேயில் சந்தித்து, ஜூன் 18 அன்று பிரீ வெட்டிங் போட்டோஷூட் (Pre-wedding photoshoot) என்ற பெயரில் கேதனை மீண்டும் லோஹகாட் கோட்டைக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு கேதன் மலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, சீயாவும் சேத்தனும் சேர்ந்து அவரைப் பின்னால் இருந்து தள்ளி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கேதன் இறந்த பிறகு, ஜூன் 21 அன்று கேதனின் வீட்டிற்கு வந்த சீயாவின் நடவடிக்கையில் மாற்றமிருந்ததைக் கவனித்த கேதனின் தங்கை, தனது அண்ணன் சிறந்த ட்ரெக்கர் என்பதால் இது விபத்தாக இருக்க வாய்ப்பில்லை எனத் தந்தை விஷால் அகர்வாலிடம் கூறியுள்ளார்.

இதனிடையே போலீசாருக்குக் கிடைத்த மூன்று முக்கிய தடயங்கள் இந்த வழக்கைத் தலைகீழாக மாற்றின. கோட்டையின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடும் கோடைக் காலத்திலும் முகத்தை மறைக்க ஹூடி (Hoodie) அனிந்த ஒரு வாலிபர் சீயா மற்றும் கேதனைப் பின்தொடர்ந்தது தெரியவந்தது. மேலும், சீயாவின் கால் ரெக்கார்டுகளை ஆய்வு செய்ததில், ஜனவரி முதல் கொலை நடந்த நாள் வரை ஒரே எண்ணிற்கு 2004 முறை (சுமார் 338 மணிநேரம்) பேசியிருப்பது அம்பலமானது. அந்த எண் சீயாவின் காதலன் சேத்தனுடையது என்பது உறுதியானதை அடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.