ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் உள்ள அக்ஷய பாத்ரா கோவில் அருகே ரேஷு குப்தா என்ற இளம் பெண் மோமோஸ் வண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 19 அன்று மாலை 6:45 மணியளவில், அந்த  சாலை வழியாக முதலமைச்சரின் வாகனப் பேரணி (செல்லவிருந்ததால், அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாலையோரக் கடைகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ரேஷு குப்தா தனது கடையை அமைத்துக் கொண்டிருந்ததோடு, மோமோஸ் செய்வதற்காக பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த போலீசார் வண்டியை உடனடியாக அகற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். பாத்திரத்தில் சுடுதண்ணீர் இருப்பதால் சற்று அவகாசம் தருமாறு ரேஷு கேட்டுள்ளார். ஆனால் போலீசார் அதற்குச் செவிசாய்க்காமல் வண்டியைப் பலவந்தமாகத் தள்ளியதால், பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் நீர் ரேஷுவின் தோள், மார்பு, தொடை உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் கொட்டி பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி குஷ்பூ ஜூன் 22 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர்களது குடும்பம் உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தது என்றும், 2020-ல் தந்தை கோவிட் தொற்றால் உயிரிழந்த பிறகு, 2022-ல் குஷ்பூ ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பிசியோதெரபி படிப்பில் சேர்ந்ததால், தாயும் தங்கை ரேஷுவும் ஜெய்ப்பூர் வந்து குடும்பச் செலவிற்காக இந்த மோமோஸ் கடையைத் தொடங்கியுள்ளனர் என்றும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் மாற்றி மாற்றிக் குற்றம் சாட்டி வரும் நிலையில், ராமநகரியா காவல் நிலையப் பொறுப்பாளர் சந்திரபான் சிங் கூறுகையில், “கொதிக்கும் நீர் கொட்டியது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி கோவர்தன் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி  காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிழக்கு மண்டல டிசிபி ரஞ்சிதா சர்மா தெரிவித்துள்ளார்.