சத்தீஸ்கர் மாநிலம் கார்வே கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான நான்கு மாதங்களில் அடுத்தடுத்து 8 ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்த மரணங்கள் குறித்து கிராம மக்கள் கடந்த ஜூன் 6 அன்று காவல்துறையிடம் சந்தேகத்தை எழுப்பியதைத் தொடர்ந்து, ஒரு கொடூரமான கொலைக் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார்வே கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான கடைக்காரர் ராம் சஹாய் ஜெய்ஸ்வால் என்பவரை ஒரு “சைக்கோ கொலையாளி” என போலீசார் அடையாளப்படுத்தியுள்ளனர். இவர் எலிகளைக் கொல்வதற்காக என்று கூறி மற்றொரு கிராமவாசியிடம் இருந்து போராக்ஸ் பவுடரை (சோடியம் டெட்ராபோரேட் டெகாஹைட்ரேட்) வாங்கியுள்ளார்.
பின்னர், அந்த விஷப்பவுடரை முதலில் ஒரு நாய் மீது சோதித்துப் பார்த்து, அது இறந்தவுடன் தனது கொலைத் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். கடந்த பிப்ரவரி 6 அன்று பத்ரி என்பவருக்கு விஷம் கலந்த மதுவைக் கொடுத்து தனது முதல் கொலையைச் செய்துள்ளார். அவர் இறந்தவுடன் யாருக்கும் சந்தேகம் வராததால், அதே பாணியில் புதாலு, சட்டு ராம், புத்ராம், வினோத் குமார், கஜானந்த், சைதுராம் மற்றும் மஹேதாரு ராம், மன்ஜி ஆகிய 8 பேருக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார்.
பழைய தேர்தல் தகராறு, பொதுவெளியில் கேலி செய்தது, வசைபாடியது, மனைவியின் மீதான சந்தேகம், மாந்திரீகம் குறித்த மூடநம்பிக்கை, நிலத் தகராறு மற்றும் ஒருவரிடம் வாங்கிய 50,000 ரூபாய் கடனைத் திருப்பித் தராமல் இருக்க அவரை ஒழித்துக் கட்டுவது போன்ற மிகவும் அற்பமான மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த 8 கொலைகளையும் ராம் சஹாய் செய்துள்ளார் எனப் புலனாய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இவர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 14 அன்று விஷம் கலந்த மதுவைக் கொடுத்துக் கொல்ல முயன்றுள்ளார், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார்.
இந்த வழக்கில் உயிரிழந்த புத்ராம் என்பவரின் உடல் ஏற்கனவே எரியூட்டப்பட்டதால், மற்ற 7 பேரின் உடல்களைத் தோண்டி எடுத்து ராய்ப்பூர் மருத்துவச் சட்டக் கழகத்திற்குப் பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியுள்ளனர். குற்றவாளி ராம் சஹாய், தான் கொலை செய்தவர்களின் இறுதிச்சடங்கிலும் கலந்து கொண்டு, துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ராம் சஹாய் ஜெய்ஸ்வால் மீது 8 கொலைகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்துள்ளதாகப் பலோடாபஜார் எஸ்பி ஓ.பி.சர்மா தெரிவித்துள்ளார்.
