மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்திலிருந்து முட்டைகளை நீக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
மதிய உணவுத் திட்டத்தின் கீழ், ஆன்மீக அமைப்பான இஸ்கானின் ‘அன்னமித்ரா’ அறக்கட்டளை மூலம் சமைக்கப்படும் தூய சைவ உணவு மட்டுமே இனி மாணவர்களுக்கு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா செய்தித் தொடர்பாளர் ராதராமன் தாஸ் கூறுகையில், இனி பள்ளி மதிய உணவில் முட்டைகள் இடம்பெறாது என்றும், அதற்குப் பதிலாக பனீர், ராஜ்மா, சோயாபீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் பிற சைவப் புரதச் சத்துக்கள் நிறைந்த பொருட்கள் உணவில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இஸ்கான் அமைப்பு ஏற்கனவே நாட்டின் 8-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் 22 நகரங்களில் இத்தகைய மதிய உணவுத் திட்டம் மூலம் சுமார் 12 லட்சம் மாணவர்களுக்கு உணவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தற்போதுள்ள நடைமுறைப்படி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், அரசின் இந்த புதிய முடிவுக்கு எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய பாஜக அரசாங்கம் குழந்தைகளுக்குரிய ஊட்டச்சத்தை மறுப்பதாகவும், மாநிலத்தில் திட்டமிட்டுச் சைவ உணவைத் திணிக்க முயற்சிப்பதாகவும் அக்கட்சியின் இணைச் செயலாளர் டெரெக் ஓ’பிரையன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
