ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டம் ரோஹி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. பிளஸ் 2 அறிவியல் பாடம் படித்து முடித்த இவர், மருத்துவராகும் கனவோடு பிரம்மபூரில் தங்கி நீட் (NEET) தேர்வுக்காகப் படித்து வந்தார். இவருக்கும் ராகேஷ் ஆச்சார்யா என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் காதல் இருந்து வந்துள்ளது. அம்பிகா தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராகேஷிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு வரும் குடும்பப் பொறுப்புகளை ஏற்க ராகேஷிற்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு வந்த நிலையில், அம்பிகாவைக் கொலை செய்ய ராகேஷ் திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 7-ஆம் தேதி ராகேஷ், அம்பிகாவைத் தனது மோட்டார் சைக்கிளில் கோபால்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் நாள் முழுவதும் ஒன்றாக நேரத்தைச் செலவிட்டுவிட்டு, இரவில் தாமதமாகத் திரும்பியுள்ளனர். அப்போது அங்குலி மேம்பாலம் அருகே வந்தபோது, ராகேஷ் வண்டியை நிறுத்தி அம்பிகாவை மேம்பாலத்திலிருந்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அம்பிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை ஒரு சாலை விபத்து போலக் காட்ட முயன்ற ராகேஷ், அம்பிகாவின் குடும்பத்தினருக்கே போன் செய்து அவர் விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சில் இருந்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் சந்தேகமடைந்த அம்பிகாவின் மாமா கானு ஜேனா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் தீவிர விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது. இதையடுத்து ராகேஷைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.