திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சிகளுக்கு வெட்கம் இல்லையா என திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்திருந்தது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, ஆ.ராசாவை சரமாரியாகச் சாடினார். அண்ணன் ஆ.ராசா சமீபகாலமாக மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்ற வரையறையே இல்லாமல் அவர் தொடர்ந்து பேசி வருவதாகவும் கடுமையாக விமர்சித்தார். ஆ.ராசாவின் இந்தச் செயல்பாடுகள் திட்டமிட்டு விடுதலைச் சிறுத்தைகளைக் குறிவைத்துத் தூண்டிவிடுவதாக அமைந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆ.ராசாவை அழைத்து கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய வன்னி அரசு, ஆ.ராசாவுக்கு 2006-ஆம் ஆண்டு நடந்த அரசியல் வரலாற்றையும் நினைவூட்டினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மைனாரிட்டி அரசாக அமைந்தபோது, காங்கிரஸ் மற்றும் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடுத்த ஆதரவால் தான் திமுக ஆட்சியே நடத்தியது என்றார். அந்த ஐந்து ஆண்டுகளும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திமுகவை மைனாரிட்டி அரசு என்றுதான் அழைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “எங்கள் ஆதரவில் ஆட்சி செய்தபோது மட்டும் ஆ.ராசா பொங்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்” எனத் தெரிவித்தார். எனவே, விடுதலைச் சிறுத்தைகளைக் குறிவைத்துத் தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், திமுக தலைமை ஆ.ராசாவைக் கண்டிப்பாகக் கண்டிக்கும் எனத் தான் நம்புவதாகவும் வன்னி அரசு திட்டவட்டமாகக் கூறினார்.