அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இப்புதிய அறிவிப்பின்படி, அதிமுகவின் கழகத் துணைப் பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் திரு. நத்தம் இரா. விசுவநாதன், B.Sc., M.L.A. (திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்) மற்றும் திரு. எஸ்.பி. வேலுமணி, M.A., M.Phil., M.L.A. (கோவை புறநகர் மத்திய மாவட்டம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கழக தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் திரு. வரகூர் அ. அருணாசலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் மிக முக்கியப் பிரிவான ‘கழக அமைப்புச் செயலாளர்களாக’ முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, கே.சி. கருப்பணன், எஸ்.பி. சண்முகநாதன், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், கே.சி. வீரமணி மற்றும் பி. பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், கழகக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் திரு. M.R. விஜயபாஸ்கர், டாக்டர் M. மணிகண்டன் ஆகியோரும், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக முன்னாள் எம்பி திரு. S.R. விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் திறம்படப் பணியாற்றிய மூத்த முன்னோடிகளுக்கு இந்த பட்டியலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நியமனங்கள் அனைத்தும் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

