மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்திருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம், நமது பொது சுகாதார உள்கட்டமைப்பின் பலவீனத்தையும், நிர்வாக அலட்சியத்தையும் மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது.

மேலும் நோயைக் குணப்படுத்தி உயிரைக் காக்கும் புகலிடமாக இருக்க வேண்டிய மருத்துவமனை வார்டில், எதிர்பாராத விதமாக மேற்கூரையின் பூச்சு திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பிறந்து இரண்டே மாதமேயான கைக்குழந்தை படுத்துறங்கிக் கொண்டிருந்த தொட்டிலின் மீதே அந்தப் பெரிய சிமெண்ட் பூச்சு கட்டை விழுந்ததில், அந்தப் பிஞ்சு குழந்தை பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டது காண்போரின் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது.

இந்தத் திடீர் விபத்தால் மருத்துவமனை வார்டு முழுவதிலும் பெரும் பீதியும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்ததைக் கண்டு, அங்கிருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த மருத்துவமனை ஊழியர்களும் உறவினர்களும் உடனடியாகச் செயல்பட்டு, அந்த வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 16 பிஞ்சு குழந்தைகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்நிலையில் காயமடைந்த அந்தக் குழந்தைக்கு அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கு இடையே குழந்தைகள் அலறிய காட்சி சமூக வலைதளங்களில் காணொளியாக வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகளின் கட்டடப் பராமரிப்பில் காட்டப்படும் இத்தகைய அலட்சியம், பொதுமக்கள் மற்றும் பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் போக்கையே காட்டுகிறது. வழக்கமான பராமரிப்புப் பணிகளைச் சரிவரச் செய்யாமல் போனதும், கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆராயாமல் விட்டதுமே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இரு மாதக் குழந்தையின் மீது பூச்சு விழுந்து காயமடைந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள போதிலும், இனிமேலாவது அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பைச் சீரமைத்து, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் உரத்த கோரிக்கையாக உள்ளது.

“>