ஆடி மாதத்தின் மிக முக்கிய விசேஷ நாளான கடைசி வெள்ளிக்கிழமை இன்று (ஆகஸ்ட் 14, 2026) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளியுடன் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரமும் இணைந்து வருவது மிகவும் விசேஷமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் இதுவரை அம்மனுக்குச் சிறப்பு வழிபாடோ அல்லது தானங்களோ செய்யாதவர்கள், இந்த நாளில் வழிபாடு செய்து தானம் அளிப்பது சிறந்தது.

ஆடி கடைசி வெள்ளியும் ஆடிப்பூரமும் இணைந்து வரும் இந்த மங்களகரமான நாளில் அம்மனுக்குச் சிறப்புப் படையல் போட்டு வழிபடலாம். கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு வளையல்கள் வாங்கித் தரலாம். கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே அம்மன் படத்திற்கு வளையல் மாலை சாற்றி, பின்னர் அந்த வளையல்களைப் பக்கத்துவீட்டுப் பெண்களுக்கு வழங்கி அருள்பெறலாம். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகளால் குடும்ப ஒற்றுமை, திருமண யோகம், குழந்தை பாக்கியம் மற்றும் சுபிட்சம் பெருகும்.

இந்த நன்னாளில் வழிபாடுகளுடன் சேர்த்து 4 முக்கியப் பொருட்களைத் தானமாக வழங்குவது அளப்பரிய புண்ணியங்களைத் தரும். வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ மற்றும் வளையல் அடங்கிய தாம்பூல தானம் வழங்குவது தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைத் தரும். அதேபோல் ஏழைப் பெண்களுக்கு புதிய மஞ்சள் அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தானமாக வழங்குவதால் குடும்பத்தில் வறுமை நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்.

அம்மனுக்குச் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் அல்லது கூழ் காய்ச்சிப் படைத்த பிறகு, அதனை மற்றவர்களுக்கு அன்னதானமாக வழங்கிவிட்டே நாம் பிரசாதமாகச் சாப்பிட வேண்டும். மேலும் சுமங்கலி பெண்களுக்குத் தாலிக்குரிய மஞ்சள் கயிற்றை மஞ்சள், குங்குமத்துடன் தானமாக வழங்குவது மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். இந்தத் தானங்களை இன்று காலை 9.15 – 10.15 அல்லது மாலை 4.45 – 05.45 ஆகிய நல்ல நேரங்களில் செய்வது சிறந்தது.

இந்த நாளில் சுமங்கலி பெண்கள், கன்னிப் பெண்கள் மற்றும் வயதான மூதாட்டிகளை வீட்டிற்கு அழைத்து உணவளித்து அவர்களின் ஆசியைப் பெறுவது, சாட்சாத் அம்பிகையின் அருளையே நேரில் பெறுவதற்குச் சமமாகும். இந்த எளிமையான வழிபாடுகளும் தானங்களும் கடன் பிரச்சனைகள் போன்ற பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுவித்து, வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் கூட்டித்தரும் என்பது நம்பிக்கையாகும்.