கருப்பைக்கு உள்ளே வளர வேண்டிய திசுக்கள், அதற்கு வெளியே வளர்வதால் பெண்களுக்கு ஏற்படும் ஒரு கடுமையான குறைபாடே ‘எண்டோமெட்ரியோசிஸ்’ (Endometriosis) ஆகும். இந்த பாதிப்பு உள்ள பெண்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 46 சதவீதம் அதிகம் என்று அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

1996 முதல் 2021 வரை சுமார் 30 லட்சம் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த நீண்ட கால ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பால் உடலில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி  இன்சுலின் செயல்பாட்டைத் தடுத்து இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது. இதுவே நாளடைவில் சர்க்கரை நோய்க்கு முக்கிய வழிவகுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய பருவத்தில் உள்ள பெண்களுக்கும், உடல் பருமன் இல்லாத பெண்களுக்கும் கூட இந்த நீரிழிவு அபாயம் அதிகமாக இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்த நோய் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை மட்டும் பாதிக்காமல், அவர்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் சீர்குலைக்கும் தன்மை கொண்டது என்பது தெளிவாகிறது.

எனவே, எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உள்ள பெண்கள் தங்களுக்கு உடல் பருமன் இல்லையென்றாலும் கூட அலட்சியமாக இருக்கக்கூடாது. இந்த நோய்க்கான சிகிச்சை எடுக்கும்போதே, அவ்வப்போது சர்க்கரை அளவையும் பரிசோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

மருத்துவர்களும் எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆரம்பத்திலேயே நீரிழிவு பரிசோதனை செய்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகின்றனர். சரியான நேரத்தில் கண்டறிந்து உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இந்த நீரிழிவு அபாயத்தில் இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.