சமூக வலைதளங்களில் தற்போது லண்டனைச் சேர்ந்த ஒரு வித்தியாசமான வேலைவாய்ப்பு குறித்த செய்திதான் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது. முதல் பார்வையில் இது ஏதோ சாதாரணத் துணி துவைக்கும் வேலை போலத் தோன்றினாலும், இதற்காக வழங்கப்படும் ஆண்டுச் சம்பளம் சுமார் ரூ.90 லட்சம் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனின் ‘தி லேடி’ பத்திரிகை மற்றும் ‘பியூச்சாம்ப் பார்ட்னர்ஸ்’ முகமை மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு, கேட்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், இதன் பின்னணியில் உள்ள நிபந்தனைகள் மிகவும் கடினமானவை.
இது சாதாரணமான லாண்ட்ரி வேலை கிடையாது. உலகின் மிக விலை உயர்ந்த மற்றும் மிகவும் நளினமான டிசைனர் ஆடைகளை எப்படிப் பராமரிப்பது, எந்த ஆடைகளை எப்படித் துவைப்பது, எப்படி உலர்த்துவது மற்றும் அவற்றை எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்பதில் கில்லாடியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு நடந்தாலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள் பாழாகிவிடும் என்பதால் இதில் கூடுதல் கவனம் தேவை.
ஆனால், இந்த வேலை துணி துவைப்பதோடு முடிந்துவிடுவதில்லை. இன்னும் பல அதிரடியான வேலைகள் இதில் அடங்கியுள்ளன. முதலாளியின் ஆடம்பர கார்களை ஓட்ட வேண்டும். அவர்களைப் பாதுகாப்பாக மீட்டிங் மற்றும் நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வதுடன், வாகனங்களைப் பராமரிக்கவும் வேண்டும்.
முதலாளியின் வீட்டில் நடைபெறும் பெரிய மற்றும் உயர்தரப் பார்ட்டிகளைத் தாங்களே முழுமையாக முன்னின்று நடத்த வேண்டும். விருந்தினர்களைக் கவனித்துக்கொள்வது மற்றும் வீட்டு நிர்வாகத்தைச் சிறப்பாகக் கவனிப்பது இந்த வேலையின் முக்கியப் பகுதியாகும். இந்த வீட்டின் உரிமையாளர் ஆண்டுக்கு 90 நாட்கள் மட்டுமே லண்டனில் இருப்பாராம். மீதமுள்ள முழு ஆண்டையும் உலகைச் சுற்றியே கழிப்பார். எனவே, நீங்களும் அவருடன் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும். இதனால் வேலை நேரம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை; 24 மணி நேரமும் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
இந்த ரூ.90 லட்சம் சம்பளம் என்பது வெறும் துணி துவைப்பதற்கானது மட்டுமல்ல. ஒரே நபரை டிரைவர், லாண்ட்ரி எக்ஸ்பெர்ட், கேர் டேக்கர் மற்றும் பர்சனல் ஹெல்பர் என அனைத்து வேலைகளையும் செய்ய வைப்பதற்கான தொகுப்பு இது.
அனைத்திற்கும் மேலாக, இதில் உள்ள மிக முக்கியமான மற்றும் கடுமையான நிபந்தனை என்னவென்றால், முதலாளியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பிரைவசி தொடர்பான ரகசியங்களை எக்காரணம் கொண்டும் எவரிடமும் வெளிப்படுத்தக் கூடாது; எல்லாவற்றையும் முழுமையாக ரகசியமாக வைத்திருக்க வேண்டும்!
