தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது. பிரசவத்திற்குப் பிறகு மருத்துவர்களின் அலட்சியத்தால் மனமுடைந்த இளம் தாய் ஒருவர் மருத்துவமனை வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது காக்கதிமாமிடி கிராமத்தைச் சேர்ந்தவர் மம்தா (27). ஏற்கனவே இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 3-ஆம் தேதி பிரசவத்திற்காக நல்கொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4-ஆம் தேதி இரவு 10:38 மணிக்கு மருத்துவர்கள் நடத்திய அறுவை சிகிச்சையில் மம்தாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குழந்தை நல வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு, மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மம்தா பால் ஊட்டி வந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அந்தக் குடும்பமே குதூகலமாய் இருந்தது.
ஆனால், அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள்கூட நீடிக்கவில்லை. திடீரென மம்தாவுக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. தன் உடல்நிலை சரியில்லை என்றும், நெஞ்சு வலி ரொம்ப அதிகமாக இருப்பதாகவும் இரவு நேரத்தில் மருத்துவமனை ஊழியர்களிடமும் மருத்துவர்களிடமும் மம்தா கதறி அழுது முறையிட்டுள்ளார். ஆனால், அவரது வலியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள், அந்தப் புகாரை முற்றிலும் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது.
கடுமையானவலியால் துடிதுடித்துப் போன மம்தாவால் அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நள்ளிரவு 2 மணியளவில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்ற அவர், மருத்துவமனை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி ஸ்டாண்டில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலையில் வார்டில் மம்தாவைக் காணாமல் அதிர்ந்துபோன குடும்பத்தினர், மருத்துவமனை முழுவதும் பதற்றத்துடன் தேடினர். அப்போதுதான் தண்ணீர் தொட்டி அருகே அவர் பிணமாகத் தொங்குவதைக் கண்டு கதறி அழுதனர்.
தங்கள் மகளின் இறப்புக்கு மருத்துவமனை மருத்துவர்களும் ஊழியர்களின் அப்பட்டமான அலட்சியமும்தான் முழுக்காரணம் என்று மம்தாவின் குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
