குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஒரு பெரும் புதிரான வழக்கு, சமூக வலைதளங்களின் துணையோடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவர் திடீரெனக் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஆள் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆண்டுகள் பல கடந்தன, இந்த வழக்கின் விசாரணையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டனர்; ஆனாலும் அந்தச் சிறுமியைப் பற்றிய எந்தவொரு துப்பும் கிடைக்காமல் காலம் கடந்தது.
இந்த நிலையில்தான், மனித கடத்தல் தடுப்புப் பிரிவு இந்த வழக்கை கையில் எடுத்து மீண்டும் தீவிர விசாரணையைத் தொடங்கியது. அப்போதைய காலத்தில் போலீசிடம் இருந்த சிறுமியின் பழைய புகைப்படம், பிறந்த தேதி மற்றும் குடும்பத்தினர் அளித்த விவரங்கள் மட்டுமே மிச்சமிருந்தன.
இதனை வைத்துத் தேடும் பணியை முடுக்கிவிட்ட காவல்துறை, பிரத்யேகமாக பெண் காவலர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படையை உருவாக்கியது. அந்தப் படையினர் சிறுமியின் பிறந்தநாளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட சமூக வலைதள கணக்குகளைத் தீவிரமாகச் சோதித்தனர். அப்போதுதான் அந்தச் சந்தேகத்திற்கிடமான ஒரு கணக்கு காவல்துறையின் கண்களில் சிக்கியது. அந்தப் பக்கத்தில், சிறுமியின் பிறந்தநநாளில் பதிவிடப்பட்டிருந்த ஒரு ‘ஹேப்பி பர்த்டே’ வாழ்த்துப் பதிவு போலீசுக்குக் கிடைத்த முதல் பெரிய துப்பாக மாறியது.
உடனே அந்தப் பக்கத்தில் உள்ள படங்களையும் மற்ற விவரங்களையும் தீவிரமாக ஆராய்ந்தபோது, ஒரு புகைப்படத்தின் பின்னணியில் நின்றுகொண்டிருந்த ஆட்டோரிக்சா ஒன்று போலீசாரின் கவனத்தை ஈர்த்தது. உடனடியாக அந்த ஆட்டோவை மோட்டார் வாகனப் பதிவகம் மூலம் கண்டுபிடித்த போலீசார், அதன் உரிமையாளரின் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்தனர். அந்த எண்ணை வைத்து மேலும் துப்பறிந்தபோது, குஜராத் கிராம வங்கியில் அதே எண்ணைக் கொண்டு ஒரு புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த வங்கிக் கணக்கின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, போலீசார் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஆம், கணக்கைத் தொடங்க அடையாளத்திற்காக இணைக்கப்பட்டிருந்த புகைப்படம், 2014-இல் காணாமல் போன சிறுமியின் அதே பழைய புகைப்படம்தான்! இதனால் சிறுமி இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டதை உணர்ந்த போலீசார், அடுத்தக்கட்டமாக மோர் பி மாவட்டத்திற்கு விரைந்தனர்.
மோர் பி மாவட்டம் பல்காமடா கிராமத்திற்குச் சென்ற காவல் துறையினர், சிறுமியும் அவளுடன் வசிக்கும் நபரும் அப்பகுதியில் இருக்கக்கூடும் என்று ஊகித்தனர். ஆனால், பொதுமக்களுக்கு எந்தவிதச் சந்தேகமும் வராத வகையிலும், பெண்ணின் அடையாளம் யாருக்கும் தெரியக் கூடாதென்பதற்காகவும் ஒரு திட்டத்தைப் போட்டனர். அதன்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் ஆசிரியர்கள் போல மாறுவேடமிட்டு அந்த கிராமத்தின் வீடுகளுக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.
ஐந்தாறு வீடுகளைக் கடந்து ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டை அடைந்தபோது, அங்கு ஒரு இளம் பெண் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் பெயரைக் கேட்டபோது வேறு ஒரு பெயரைச் சொன்னார். உடனே உஷாரான போலீசார், “நீங்கள் அரசு நலத்திட்டங்களைப் பெற வேண்டுமானால் உங்கள் சொந்த ஊர் மற்றும் தந்தையின் பெயரைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்” என்று சாதுரியமாகக் கூறினர்.
அதை நம்பி அந்தப் பெண் தன் தந்தையின் உண்மையான பெயரைச் சொல்ல, 2014-இல் பதியப்பட்ட புகாரில் இருந்த பெயரும் இதும் ஒத்துப்போனது. 12 ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்த தேடல் முடிவுக்கு வந்ததை போலீசார் உறுதி செய்தனர். அதேவேளையில், அந்தப் பெண்ணுடன் வசித்து வந்த நபர் ஆட்டோ ஓட்டச் சென்றிருந்தது தெரியவந்தது. அவரை போலி கணக்கெடுப்பு நாடகத்தின் மூலம் உடனடியாக வீட்டிற்கு வரவழைத்த போலீசார், அவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
விசாரணையில், 2014-இல் தன் தாயுடன் ஏற்பட்ட சிறு தகராறில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சிறுமி, ராஜ்கோட் பேருந்து நிலையத்தில் சில நாட்கள் தங்கியிருந்ததாகவும், அப்போதுதான் இந்த நபரின் அறிமுகம் கிடைத்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.
குடும்பத்தாரால் இழந்துவிட்டதாகக் கைவிடப்பட்ட அந்தச் சிறுமி, தற்போது 26 வயது இளம்பெண்ணாகவும், நான்கு குழந்தைகளின் தாயாகவும் மாறி தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளார். ஒரு சின்ன இன்ஸ்டாகிராம் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு, 12 ஆண்டு காலப் புதிரை அவிழ்த்ததுடன், அந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் மாற்றி எழுதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பெண்ணின் தற்போதைய கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
