உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இறந்த 75 வயது முதியவரின் கைரேகையை வெற்றுத் தாள்களில் பதிவு செய்யும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. லக்னோவின் கதவுன்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சத்ரபால் (75). இவருடைய மறைவுக்குப் பிறகு நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், இறந்துபோன முதியவரின் கையைப் பயன்படுத்தி வெற்றுத் தாள்களில் கைரேகை பதிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணங்கள் எதற்காகப் பெறப்பட்டன என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவும் இல்லை.
இது பற்றி வெளியான தகவல்படி, இறந்த சத்ரபாலுக்கும் அவரது மனைவி சிதேவிக்கும், அவர்களது மகன் மகேந்திரா மற்றும் மருமகள் லட்சுமி ஆகியோருக்கு இடையே நீண்ட நாட்களாகச் சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே முதிய தம்பதியினர் தங்களது பூர்வீக வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, உறவினர்களின் வீடுகளில் தங்கி வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
मौत के बाद भी जमीन का लालच नहीं गया!
लखनऊ रहीमाबाद के खड़ौहा गांव में रिश्तों को शर्मसार कर देने वाला मामला।आरोप है कि पिता की मौत के बाद घर में मातम के बीच उनका एकलौता बेटा मृत शरीर के अंगूठे का निशान सादे कागज पर लगवाता रहा।ग्रामीणों ने घटना का वीडियो बना लिया, जो अब वायरल है। pic.twitter.com/4X9Xc6r2Cr
— Journalist Ravendra kumar (@Chhotukingoffi1) August 13, 2026
சத்ரபாலின் மகள் சுமன் கூறுகையில், கடந்த ஜூலை 7 அன்று தனது தந்தையின் உடல்நிலை மோசடைந்ததாகவும், அவரது நிலை குறித்து மகேந்திராவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். பின்னர் மகேந்திரா தனது தந்தைக்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி கிராமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் ஜூலை 9 அன்று சத்ரபால் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தந்தையின் மறைவைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அவரது மகள்கள் கிராமத்திற்கு வந்தபோது, மகேந்திராவுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இறந்த சத்ரபாலின் உடலிலிருந்து கட்டாயமாக கைரேகை பெறப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோ வெளியாகிப் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்தச் சொத்துத் தகராறு காரணமாகத்தான் வெற்றுத் தாள்களில் கைரேகைகள் பெறப்பட்டிருக்கலாம் என்று பரவலாகச் சந்தேகிக்கப்பட்டாலும், சொத்து மாற்றுவதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காகவோதான் இந்த ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ புகாரும் பெறப்படவில்லை என்றனர். இருப்பினும், வைரலாகி வரும் அந்த வீடியோவை முழுமையாக ஆராய்ந்து வருவதாகவும், அதில் இடம்பெற்றுள்ள நபர்கள் யார் என்பதைக் கண்டறிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். உண்மைகள் கண்டறியப்பட்ட பிறகு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
