இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான ‘பஜாஜ் ஆட்டோ’ (Bajaj Auto) நிறுவனத்தின் தரவு அமைப்புகளைக் (Data Systems) குறிவைத்து ஹேக்கர்கள் மிகப்பெரிய சைபர் தாக்குதலை நடத்தியுள்ளனர். ரேன்சம்வேர் (Ransomware) எனப்படும் நச்சு மென்பொருள் மூலம் நிறுவனத்தின் முக்கியத் தரவுகள் அனைத்தும் முடக்கப்பட்டு, இந்த டிஜிட்டல் கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறையைத் தொடர்ந்து, தற்போது ஹேக்கர்கள் தங்களது கவனத்தை ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களின் பக்கம் திருப்பத் தொடங்கியுள்ளதை இந்தச் சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. தங்களது தரவு அமைப்புகள் மீது ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை பஜாஜ் ஆட்டோ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது, ஒட்டுமொபைல் மற்றும் தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திடீர் சைபர் தாக்குதல் காரணமாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தினசரி அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தித் தரவுப் பகிர்வுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ள நிறுவனத்தின் உயர்மட்டத் தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் உடனடியாகக் களமிறக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட தரவு அமைப்புகளை மீட்கும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எனினும், நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி தொடர்பான முக்கியத் தரவுகள் ஏதேனும் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதா அல்லது இதற்குப் பதிலாகப் பிணைத்தொகை ஏதேனும் கோரப்பட்டுள்ளதா என்பது குறித்த விரிவான விவரங்களைப் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. இச்சம்பவம், கார்ப்பரேட் நிறுவனங்களின் டிஜிட்டல் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.