அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், விதிகளை மீறி தனியாகத் தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் தொழில் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர், தனியாகத் தொழில் செய்வதோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தங்களது சொந்த கிளினிக்குகளுக்கு மாற்றுவதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது; அவ்வாறு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டதோடு, இதுகுறித்து மாநிலத் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, சம்பந்தப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியரான டாக்டர் சந்தோஷ்குமார் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடவோ அல்லது தடை விதிக்கவோ முற்றிலுமாக மறுத்துவிட்டது.

மேலும் “உயர் நீதிமன்றம் பொதுமக்களின் நலன் சார்ந்த மிக முக்கிய விவகாரத்தைக் கையாண்டு வருகிறது; அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது என்ற நோக்கம் முற்றிலும் சரியானது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவு தனிப்பட்ட ஒருவருக்கு எதிரானது அல்ல, விதிகளை மீறும் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் பொதுவானது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.